வெளிநாடு அனுப்புவதாக ஏமாற்றிய பெண்ணின் தாயாரிடம் செயின் பறிப்பு
தேனி: ஊஞ்சாம்பட்டி கிழக்கு ரத்தினா நகர் ஸ்தபதி பழனிவேல் 43. இவரது மனைவி ராதா 40. இத்தம்பதியின் மகள் பிரவினா. இவர் சென்னையில் வேலை பார்த்த போது பெற்றோரிடம், வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் ஏஜன்சியிடம் தொடர்பில் உள்ளதாக தெரிவித்தார். ஒரு நபரை அனுப்பி வைத்தால் லாபமாக ரூ.20ஆயிரம் கிடைக்கும் எனவும் பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் பழனிவேல், தனக்கு தெரிந்த அனைவரிடமும் தனது மகள் அலைபேசி எண்ணை வழங்கி வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்ப மகள் உதவுவார்,' என தெரிவித்து வந்தார். அதனடிப்படையில் வெளிநாடு வேலைக்கு செல்ல புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை சேர்ந்த வெங்கடேசன், பிரவீனாவின் அலைபேசியில் தொடர்பு கொண்டு வெளிநாட்டிற்கு செல்ல ரூ.5 லட்சம் பணம் வழங்கியுள்ளார். வெளிநாட்டிற்கு அனுப்பாமல் , பணத்தையும் திருப்பித்தராமல் இருந்ததால் வெங்கடேசன், தனது நண்பருடன் இணைந்து அத்துமீறி ராதா வீட்டில் நுழைந்து மிரட்டி ராதாவை சோபாவில் தள்ளி, 6 பவுன் தங்கத்தாலிச் செயினை பறித்து சென்றனர். பாதிக்கப்பட்ட ராதா புகாரில் அல்லிநகரம் போலீசார் வெங்கடேசன், அவரது உறவினரை தேடி வருகின்றனர்.