உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விவசாயிகள் செலவில் சின்னமனுார் வாய்க்கால் துார்வாரும் பணி துவக்கம்

விவசாயிகள் செலவில் சின்னமனுார் வாய்க்கால் துார்வாரும் பணி துவக்கம்

சின்னமனூர்: நீர்வளத்துறையினரை நம்பி இனி பயனில்லை என சின்னமனுார் விவசாய சங்கத்தினர் சொந்த செலவில் வாய்க்கால்களை தூர் வாரும் பணியை துவக்கி உள்ளனர்.கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. இந்த நிலங்களுக்கு தண்ணீரை பகிர்ந்தளிக்க 17 வாய்க்கால்கள் உள்ளன. வாய்க்கால்கள் தூர் வாருவது, சேதமடைந்த மடைகளை சரி செய்வது நீர்வளத்துறையினரால் மேற்கொள்ள வேண்டும். வாய்க்கால்களை தூர் வாரி பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். எல்லா வாய்க்கால்களுமே செடி, கொடிகள் வளர்ந்து புதராக மாறி விட்டது. கரைகள் சேதமடைந்துள்ளது. விவசாயிகள் வயல் வேலைகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. முதல் போகத்திற்கு ஜுன் முதல் தேதி தண்ணீர் திறக்க உள்ளனர். திறக்கப்படும் தண்ணீரை முழுமையாக பயன்படுத்த முடியாத அளவிற்கு வாய்க்கால்கள் பராமரிப்பு இன்றி உள்ளன.இது தொடர்பாக சின்னமனூர் விவசாயிகள் ஆலோசனை மேற்கொண்டனர். 60 முதல் 70 சென்ட் நிலத்திற்கு ரூ.300 வீதம் வரி நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து வரி வசூலித்து சின்னமனூர் சின்ன வாய்க்கால் , பெரிய வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை நேற்று துவக்கினர். முன்னதாக நேற்று காலை அய்யனார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, சின்ன வாய்க்காலில் தூர் வாரும் பணி துவங்கியது. இந்த பணிகள் 8 கி.மீ. நீளமுள்ள சின்ன வாய்க்கால் மற்றும் பெரிய வாய்க்கால்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி