உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

 மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்

தேனி: மாவட்டம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சர்ச்களில் கிறிஸ்து பிறப்பு செய்தி அறிவிக்கப்பட்டு, நற்கருணை ஆராதனை, சிறப்பு திருப்பலிகள் நடந்தன. இதில் திரளான கிறிஸ்துவர்கள் புத்தாடைகள் அணிந்து உறவினர்கள், நண்பர்களுக்கு 'கேக்', இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தேனி : பங்களாமேடு உலக மீட்பர் சர்சில் பாதிரியார் திருத்துவராஜ் தலைமையில் அதிகாலை சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் தேனி நகர், அரண்மனைப்புதுார், வடபுதுப்பட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்துவர்கள் குடும்பத்துடன் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். காலையில் உதவி பாதிரியார் சுவீட்டன் தலைமையில் திருப்பலி நடந்தது. திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. என்.ஆர்.டி., ரோடு சி.ஐ.எஸ்., பரிசுத்த பவுல் சர்ச்சில் சபைகுரு ஸ்டேன்லி, அதிகாலை சிறப்பு திருப்பலி ஆராதனை நடத்தினார். தேனி நகர் பகுதி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். அரப்படிதேவன்பட்டி, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சி.எஸ்.ஐ., சர்சுகளிலும் சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் பங்கேற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஆண்டிபட்டி: சி.எஸ்.ஐ., சர்ச்சில் பாதிரியார் ஜஸ்டின் திரவியம் தலைமையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டன. சர்ச்சில் கிறிஸ்துமஸ் குடில், மரம் அமைத்து வழிபட்டனர். பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஆர்.சி., சர்ச் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நள்ளிரவில் பாதிரியார் சுவிட்டன் தலைமையில் பாடல் திருப்பலி பூஜை, நற்கருணை ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு இயேசுநாதர் பிறந்த குடில் அலங்கரிக்கப்பட்டு வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டு இருந்தது. திருப்பலியில் சேவா மிஷனரி அருட் சகோதரிகள், பாடல் குழுவினர் கிறிஸ்துமஸ் பாடல் பாடினர். அனைவருக்கும் 'கேக்' வழங்கப்பட்டன. கிறிஸ்துவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை புனித அமல அன்னை சர்ச்சில் கிறிஸ்து பிறப்பு, திருப்பலி பூஜைகளை தொடர்ந்து பாதிரியார் பீட்டர் சகாயராஜ் நற்கருணை ஆசிர்வாதம் வழங்கினார். பெரியகுளம் வடகரை கோட்டை மேடு சி.எஸ்.ஐ., சர்ச்சில் திருப்பலி பூஜைகள், நற்கருணை ஆசிர்வாதத்தை பாதிரியார் ஸ்டாலின் பிரபாகரன் வழங்கினார். இயேசுநாதர் பிறப்பு பாடல்களை பாடினர். தாமரைக்குளம், லட்சுமிபுரம்,எருமலைநாயக்கன்பட்டி, தேவதானப்பட்டி உட்பட தாலுகா முழுவதும் சர்ச்களின் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடந்தன. கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் உத்தமபாளையம், கம்பம், சின்னமனுார் உள்ளிட்ட பல ஊர்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ராயப்பன் பட்டி பனிமய மாதா சர்ச்சில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகள் நடந்தன. உலக நன்மை வேண்டி சிறப்பு பிரார்த்தனைகளும் நடந்தன. புத்தாடைகள் அணிந்து இனிப்புகள் வழங்கி, ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த சர்ச்சில் உள்ள பிரமாண்டமான வெண்கல மணி ஒலிக்கப்பட்டது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் தினங்களில் மட்டுமே இந்த மணி ஒலிக்கும். இதன் சத்தம் 10 கி.மீ., சுற்றளவிற்கு கேட்கும். அதிக எடை கொண்ட இந்த மணி பிரான்ஸ் நாட்டிலில் இருந்து வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. உத்தமபாளையம் விண்ணரசி சர்ச்சில் பாதிரியார் அந்தோணிராஜ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் நகரங்களில் உள்ள 20க்கும் மேற்பட்ட சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனைகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர். போடி: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள புனித ஆரோக்கிய அன்னை சர்ச்சில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. 60 ஆண்டுகள் பழமையான புனித ஆரோக்கிய அன்னை சர்ச்சில் நேற்று முன்தினம் இரவு பாதிரியார் அருண் பவியான் தலைமையில் விடிய, விடிய கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகள், உலக நன்மை வேண்டி பிரார்த்தனைகள் நடந்தன. அதிகாலை 12:00 மணிக்கு சர்ச்சில் உள்ள விளக்குகள் சில நிமிடம் அணைத்து வைக்கப்பட்டு, நட்சத்திரம் காண்பித்து கிறிஸ்து பிறப்பு செய்தி அறிவிக்கப்பட்டு, ஜெபம் மேற்கொண்டனர். புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஏராளமானோர் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர். பெரும்பாலான வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி