காட்டு யானைகளால் தென்னை மரங்கள் சேதம்
கடமலைக்குண்டு: -: கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு ரோட்டில் ஏழு சுனை மலைப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் கடந்த சில நாட்களாக உள்ளது. நேற்று முன்தினம் இரவில் மலை அடிவாரத்தில் உள்ள சேர்மலை என்பவரின் தோட்டத்திற்குள் யானைகள் புகுந்தது. இரவு காவலில் யாரும் இல்லாததால் அங்கு வந்த யானைகள் கூட்டம் 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. பாதிப்பு குறித்து சேர்மலை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற வனத்துறையினர் சேதம் அடைந்த மரங்களை பார்வையிட்டு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு யானைகள் கூட்டம் மேலப்பட்டி, கொம்புக்காரன்புலியூர் பகுதியில் தோட்டங்களில் தென்னை மரங்களை சேதப்படுத்தியது. தற்போது ஏழு சுனை மலையடிவாரத்தில் தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். யானைகள் தோட்டத்திற்குள் வந்து செல்வதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.