விவசாயிக்கு கொலை மிரட்டல் நடவடிக்கைக்கு கலெக்டர் உத்தரவு
தேனி: பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி வடக்குத்தெரு தர்மர் 69. இவர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம்,' காமாக்காபட்டியில் வசிக்கும் முருகன், அரசின் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து ஓடைப் பகுதியில் கிணறு வெட்டிக் கொண்டிருக்கிறார். அதில் வரும் கற்களை விற்பனை செய்து கனிமங்களை அழிப்பதுடன், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறார். இதுகுறித்து கெங்குவார்பட்டி பிட் 1 வி.ஏ.ஓ., தாசில்தாருக்கு பலமுறை புகார் அளித்தேன் நடவடிக்கை இல்லை. கலெக்டரிடம் மனு அளித்தேன். நீங்கள் உத்தரவிட்டும், அரசு நில ஆக்கிரமிப்பு தொடர்கிறது. இதனை கேட்டால்எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் புகார் தெரிவித்தார். இதை கேட்ட கலெக்டர், பெரியகுளம் டி.எஸ்.பி., விபரம் பெற்று, இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.