டி. ஏ. பி., க்கு பதிலாக காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உரம் பயன்படுத்தலாம்
கம்பம் : விவசாயிகள் டி.ஏ.பி. உரத்திற்கு பதிலாக காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தினால் நல்ல மகசூல் கிடைக்கும் என்று வேளான் துறை ஆலோசனை வழங்கி உள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர வாழை, தென்னை, திராட்சை, காய்கறி பயிர்கள் , நிலக்கடலை, எள்ளு உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்கள், தட்டை, மொச்சை, பாசிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகள் சாகுபடியாகிறது.விவசாயிகள் பயிர்களுக்கு டி.ஏ.பி. உரம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த உரம் பல சமயம் தட்டுப்பாடு ஏற்படும்.விலையும் அதிகமாக இருக்கும். இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், டி.ஏ.பி.,க்கு பதிலாக என்.பி.கே. காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரம் இடுவதால் பயிர்கள் நன்றாக வளர்ந்து கூடுதல் மகசூல் கிடைக்கும். சூப்பர் பாஸ்பேட்டில் கந்தக சத்து உள்ளதால் பயிர்கள் வளர்ச்சி நன்றாக இருக்கும்.டி. ஏ.பி. யில் தழைச்சத்து 18 சதவீதம், மணிச்சத்து 46 சதவீதம் இருக்கும். ஆனால் காம்ப்ளக்ஸ் உரத்தில் தழை , மணி , மற்றும் சாம்பல் சத்துக்கள் இருக்கும்.சூப்பர் பாஸ்பேட்டில் கூடுதலாக கந்தக சத்தும் உள்ளதால் பயிர்கள் நன்றாக வளர்ந்து கூடுதல் மகசூல் கிடைக்கும்.எனவே விவசாயிகள் டி.ஏ. பி. உரத்தை மட்டுமே நம்பியிருக்காமல் , அதற்கு மாற்றாக அதை விட கூடுதல் பலன்கள் தரக்கூடிய காம்ப்ளக்ஸ், சூப்பர் பாஸ்பேட் உரங்களை பயன்படுத்தலாம், அதனால் கூடுதல் பலன்கள் கிடைக்கும், இந்த உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் என்றனர்.