கொழுக்குமலை ஜீப் சவாரியில் முறைகேடு அக்.21ல் காங்., போராட்டம் நடத்த முடிவு
மூணாறு: சின்னக்கானல் ஊராட்சியில் கொழுக்குமலை ஜீப் சவாரி தொடர்பாக ரூ. கோடி கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அக்.21ல் காங்கிரஸ் கட்சியினர் 24 மணி நேர தொடர் போராட்டம் அறிவித்தனர். கேரள, தமிழக மாநிலங்களில் இடுக்கி, தேனி ஆகிய மாவட்டங்களின் எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் அடி உயரத்தில் சூரியநல்லி அருகே கொழுக்குமலை அமைந்துள்ளது. அங்கு சூரிய உதயம், அஸ்தமனம் ஆகியவற்றை காண தினமும் நூற்றுக்கணக்கில் பயணிகள் செல்வதுண்டு. சூலியநல்லியில் இருந்து கொழுக்குமலை வரை 12 கி.மீ., தூரம் ரோடு கரடு, முரடாக உள்ளதால் ஜீப்புகள் மட்டும் செல்ல முடியும். ஒரு ஜீப்பில் ஆறு பேர் பயணிக்க ரூ.3000 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதில் எச்.எம்.எல். தேயிலை கம்பெனிக்கு ரூ.300, கொழுக்குமலை தேயிலை கம்பெனிக்கு ரூ.100, சின்னக்கானல் ஊராட்சிக்கு ரூ.200 என வழங்க வேண்டும். ஊராட்சிக்கு வழங்கப்படும் ரூ.200ல் மாவட்ட சுற்றுலா துறைக்கு ரூ.60 விகிதம் வழங்கப்படுகிறது. சின்னக்கானல் ஊராட்சி வசூலிக்கும் ரூ.200ஐ , ஊராட்சி தலைவர், சுற்றுலா துறை செயலர் ஆகியோர் இணைப்பிலான வங்கி கணக்கில் அன்றாடம் செலுத்த வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றாததால் சின்னக்கானல் காங்கிரஸ் மண்டல குழு தகவல் பெறும் உரிமை சட்டப்படி கிடைத்த தகவலில் 2024 ஜூலையில் மட்டும் ஜீப்புகள் 2848 டிரிப்புகள் சென்றன. அதன் மூலம் கிடைத்த ரூ.5,69,600, 2025 ஜூனில் 1971 டிரிப்புகள் மூலம் கிடைத்த ரூ.3,94,200 ஆகியவற்றை வங்கியில் செலுத்தவில்லை என தெரியவந்தது. தவிர ஊராட்சி சார்பில் செயல்படுத்திய பாட்டில் பூத், சோலார் விளக்கு ஆகிய திட்டங்களில் எவ்வித டெண்டர் நடைமுறைகளும் பின்பற்றாமல் ரூ.70 லட்சம் வரை மோசடி நடந்ததாகவும் தெரியவந்தது. இந்த முறைகேடுகள் தொடர்பாக விஜிலன்ஸ் நீதிமன்றத்தை அணுகவும், ஊராட்சி அலுவலகம் முன்பு அக்.21ல் 24 மணி நேரம் தொடர் போராட்டம் நடத்தவும் சின்னக்கானல் காங்கிரஸ் மண்டல குழு முடிவு செய்தது. அத்தகவலை முன்னாள் எம்.எல்.ஏ. மணி, காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் முனியாண்டி, ஒன்றிய தலைவர் விஜயகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.