தெருவில் புகுந்த பாசன கால்வாய் நீரால் பாதிப்பு
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரத்தில் அப்பகுதி வழியாக செல்லும் ராஜ வாய்க்கால் கால்வாய் நீர் தெருவுக்குள் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூல வைகை ஆற்றில் தடுப்பணை அமைத்து ராஜ வாய்க்கால் மூலம் குன்னூர் அருகே உள்ள கருங்குளம், செங்குளம் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. ராஜ வாய்க்காலில் செல்லும் நீர் அப்பகுதி விவசாய நிலங்கள் வழியாக அம்மச்சியாபுரத்தில் குடியிருப்பு தெருக்களில் தேங்கிவிட்டது. இதனால் அம்மச்சியாபுரம் பண்டிதாரர் கோயில் தெருவில் நீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேங்கிய நீரை அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.