கம்பம் சின்ன வாய்க்கால் தடுப்பணை சேதம்; 1400 ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கும் அபாயம் பெரியாறு வைகை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
கம்பம்: கம்பம் சின்ன வாய்க்கால் பாசனத்தில் 1400 ஏக்கர் இரண்டாம் போகம் நெல் சாகுபடி செய்ய முடியாத அபாயம் எழுந்துள்ளது. சேதமடைந்த தடுப்பணை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின் ஆய்வு செய்தார். கம்பம் பள்ளத்தாக்கில் அக் . 17 ல் பெய்த கனமழையால் வாய்க்கால், கரைகள், தடுப்பணைகள், மதகுகள் சேதமடைந்தன. கனமழையால் கம்பம் சின்ன வாய்க்காலுக்கு தண்ணீர் வரும் தடுப்பணை உடைந்தது, உத்தமுத்து வாய்க்காலின் தலை மதகு உடைந்தது. மார்க்கையன்கோட்டை முல்லை பெரியாற்றில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதில் கம்பம் சின்னவாய்க்கால் பாசனத்தில் 1400 ஏக்கர் நெல் வயல்கள் உள்ளன. இந்த வயல்களுக்கு தண்ணீர் குள்ளப்பகவுண்டன்பட்டியில் முல்லைப் பெரியாற்றில் மைக்ரோ பவர் ஹவுஸ் கட்டியுள்ள தடுப்பணை மூலம் கிடைக்கிறது. தற்போது தடுப்பணை உடைந்ததால், தண்ணீர் முழுமையாக ஆற்றுக்கு செல்கிறது. வாய்க்காலுக்கு செல்லவில்லை. தடுப்பணையை சீரமைத்து தண்ணீரை தேக்கினால் மட்டுமே சின்ன வாய்க்காலில் தண்ணீர் செல்லும். அப்பணிகள் நடைபெறாததால், இரண்டாம் போகத்திற்கு நாற்றுகள் வளர்க்க தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதியில் உள்ளனர். சீரமையுங்கள் நேற்று முன்தினம் பெரியாறு வைகை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின் தலைமையிலான குழுவினர் தடுப்பணையை ஆய்வு செய்தனர். உடனடியாக நாற்றுகள் வளர்க்க தண்ணீர் தர வேண்டும். எனவே சின்னவாய்க்கால் சீரமைக்க நடவடிக்கை எடுக்க உதவி செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார். உடன் கம்பம் விவசாயிகள் சங்க தலைவர் நாராயணன், நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகி ராமகிருஷ்ணன் இருந்தனர். நாற்று வளர்ப்பு பாதிப்பு ராமகிருஷ்ணன் கூறுகையில், 'ஆங்கூர் பாளையம், மஞ்சக் குளம், சாமாண்டிபுரம், சுருளிப்பட்டி ரோடு, செங்ககட்டி களம், ஏழரசு கோயில் பகுதியில் உள்ள 1400 ஏக்கரில் நாற்றுகள் வளர்க்கும் பணி தடைபட்டுள்ளது. தடுப்பணை சேதம் ஏற்படாவிடில் இந்நேரம் நடவு பணிகளையே துவங்கி இருப்போம். ஆனால் இன்னமும் நாற்றுகளே வளர்க்க முடியாத நிலையில் உள்ளோம். அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு 1400 ஏக்கர் பாசனத்தை உறுதி செய்ய வேண்டும்' என்றார்.