உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சேதமடைந்த சிறுவர் பூங்கா; கழிவுநீரால் சுகாதாரக்கேடு: அடிப்படை வசதிகள் இன்றி போடி நகராட்சி 17வது வார்டு மக்கள் சிரமம்

சேதமடைந்த சிறுவர் பூங்கா; கழிவுநீரால் சுகாதாரக்கேடு: அடிப்படை வசதிகள் இன்றி போடி நகராட்சி 17வது வார்டு மக்கள் சிரமம்

போடி: போடி நகராட்சி 17வது வார்டில் சாக்கடை வசதி இன்றி கழிவுநீர் அடிக்கடி தெருக்களில் தேங்குகிறது. வீடுகளுக்குள் வால் புழுக்கள் வருவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும் தெருக்களில் மக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவில் குண்டும், குழியுமாக உள்ளதால் சிரமம் ஏற்படுகிறது என குடியிருப்போர் குமுறுகின்றனர். இந்த வார்டு பகுதியில் பேச்சியம்மன் கோயில், வடக்கு, கிழக்கு மறவர் காளியம்மன் கோயில், சவுந்திரவேல், பேட்டைத் தெருக்கள், தியாகி கருப்பையா சந்து, கிழக்கு வெளி விதி, கக்கன் சந்து, அழகர் சந்து உள்ளிட்ட ஏராளமான தெருக்கள் உள்ளன. 800 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். காளியம்மன் கோயில் தெரு குடியிருப்போர் நமச்சிவாயம், போஸ், சந்தனம், லட்சுமி, செல்லத்தாய் ஆகியோர் கூறியதாவது: தண்ணீர் வசதி அவசியம் தெருக்களில் சாக்கடை தடுப்புகள் சேதம் அடைந்து உள்ளன. இவற்றை துார்வாராமல் உள்ளதால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சீராக செல்ல முடியாமல், தெருக்களில் தேங்குகிறது. இதனால் உருவாகும் வால் புழுக்கள் வீடுகளுக்குள் வருகின்றன. இதுதவிர கொசு உற்பத்தியால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. சாக்கடை துார்வார துப்புரவுப் பணியாளர்கள் வருவது இல்லை. தெருக்களில் ரோடு அமைத்து, பல ஆண்டுகள் ஆகின்றன. பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் அமைக்க 'பேவர் பிளாக்' ரோடு தோண்டப்பட்டதால் கற்கள் பெயர்ந்து மக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படு கின்றனர். மறவர் சாவடி அருகே போர்வெல், தண்ணீர்தொட்டி அமைக்க பகிர்மான குழாய் பணிகள் முடிந்த நிலையில், ஓராண்டாகியும் துவக்கப்படாத பணிகள் கிடப்பில் உள்ளது. இதனால் போர்வெல் தண்ணீர் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர். சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா போடி நுழைவுப் பகுதியில் போஜன் பார்க் பஸ் ஸ்டாப் அமைந்து உள்ளது. இந்த இடத்தில் சிறுவர்கள் விளையாட பூங்கா இருந்தது. தற்போது தனி நபர்கள் ஆக்கிரமிக்காத வகையில் சுற்றி இரும்பு வேலி மட்டுமே நகராட்சி நிர்வாகம் அமைத்து உள்ளது. சிலர் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளதால் திறந்த வெளியில் உள்ளது. இதனால் மது பிரியர்கள், சமூக விரோதிகளின் கூடாரமாகவும், சமூக விரத செயல்கள் நடக்கும் இடமாக மாறி உள்ளது. குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் இல்லாமல் அருகே உள்ள வார்டின் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்பும் அவல நிலை உள்ளது. கிழக்கு வெளி வீதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாடு இன்றி பூட்டியே உள்ளது. அருகே உள்ள ஆண் களுக்கான சுகாதார வளாகமும் போதிய பராமரிப்பு இன்றி உள்ளதால் மக்கள் பயன்படுத்த தயங்கு கின்றனர். சாக்கடை, ரோடு, வசதி ஏற்படுத்தி தருவதோடு சிறுவர்களுக்கான பூங்காவை சீரமைக்கவும், அங்காடி மையம், போர்வெல் தண்ணீர் தொட்டி அமைக்கவும், புதிதாக கட்டப்பட்ட சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர போடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி