பாதாள சாக்கடை மூடி சேதம் வீட்டின் முன் தேங்கும் கழிவுநீர்
தேனி : தேனி வள்ளிநகரில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் குடியிருப்போர் அவதியடைகின்றனர்.தேனி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் பாதாளசாக்கடை மூடி சேதமடைந்தும் திறந்த நிலையிலும் காணப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் குடியிருப்போர், வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி 13வது வார்டு வள்ளிநகரில் குப்பை கிடங்கு அருகே பாதாள சாக்கடை மூடி பக்கவாட்டில் சேதமடைந்துள்ளது. மழை பெய்தால் சேதமடைந்த பகுதி வழியாக கழிவு நீர் வீடுகளுக்கு முன் தேங்குவதாக குடியிருப்போர் கவலை தெரிவிக்கின்றனர்.பாண்டி, வள்ளிநகர், தேனி: மழை பெய்தால் பாதாள சாக்கடை கழிவுகள் ரோட்டில் தேங்குகிறது. நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குழந்தைகள் நடந்து செல்லும் போது உள்ளே விழும் அளவிற்கு பள்ளம் உள்ளது.இதனால் குழந்தைகளுடன் வசிப்பவர்கள் அச்சத்துடன் உள்ளனர். குடியிருப்போர்கள் இணைந்து தற்காலிமாக சரி செய்துள்ளோம். நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.