கருவின் பாலினம் அறிவித்தால் டாக்டர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை குடும்ப நலத்துறை துணை இயக்குநர் எச்சரிக்கை
பெரியகுளம் : ''ஸ்கேன் வழியாக கருவின் பாலினத்தை தெரிவிக்கும் டாக்டர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபாரதம் விதிக்கப்படும்.'' என, மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குநர் அன்புச்செழியன் எச்சரித்தார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு, ஸ்கேன் பார்க்கும் மருத்துவமனைக்கு வழிகாட்டி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மருத்துவ இணை இயக்குனர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட குடும்ப நலத்துறை துணை இயக்குநர் அன்புச் செழியன் பேசியதாவது: மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 28 ஸ்கேன் மையங்களும், 73 தனியார் மருத்துவமனைகளில் ஸ்கேன் மையங்கள் உள்ளன. கருவின் பாலினத்தை கர்ப்பிணி பெண்ணிடமோ, உறவினர்களிடமோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஏதேனும் முறையிலோ அறிவித்தால் 'பாலினத் தேர்வை தடை செய்தல்' சட்டம் 1994 (PCPNDT ACT 1994) சட்டத்தின் படி சம்பந்தப்பட்ட டாக்டர் மீது ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே டாக்டர் மீது இரண்டாவது முறை குற்றம் நிரூபிக்கப்பட்டால் டாக்டரின் பெயர் மருத்துவ கவுன்சிலில் நிரந்தரமாக நீக்கம் செய்யப்படும். மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மாவட்டத்தில் சட்டரீதியாக கருக்கலைப்பு அரசு மருத்துவமனை 15, தனியார் மருத்துவமனைகள் 51 உள்ளது., என்றார்.மருத்துவமனை அலுவலக கண்காணிப்பாளர் சையது ஹவுஸ் அமீர், அரசு, தனியார் மருத்துவமனை டாக்டர்கள், ஸ்கேன் மையங்களின் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.