தேனி மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு புழக்கம் தாராளம்; வேட்டைக்கு பயன்படுத்துவதாக போலீசார் அலட்சியம்
கம்பம் : தேனி மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு, புழக்கம், சர்வ சாதாரணமாக உள்ளது. தயாரிக்கும் போது ஒருவர் பலியாகியும், வேட்டைக்கு நாட்டு வெடி பயன்படுத்துவதாக கூறி போலீசார் அலட்சியம் காட்டுகின்றனர். நாட்டு வெடிகுண்டு நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தேனி மாவட்டத்தில் சமீப காலமாக நாட்டு வெடிகுண்டுகள், தயாரிப்பு புழக்கம் அதிகரித்து வருகிறது. 'அவுட்' எனப்படும் நாட்டு வெடிகுண்டுகள் கலவரங்களின் போது இரு தரப்பினர் மோதிக் கொள்ளும் போதும் இதனை பயன்படுத்துவர். மேலும் வன உயிரினவேட்டைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். மாவட்டத்தை சுற்றி வனப்பகுதியாக இருப்பதால் காட்டுப் பன்றிகள் வேட்டையாட பெரும்பாலும் நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்படுகிறது. கடந்த செப்டம்பரில் கம்பம் வடக்கு பட்டியில் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயார் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் குருநாதன் 67, என்பவர் பலியானார். அவரது இரு பேரன்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று திரும்பினர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் தரையில் கிடந்த ஒரு நாட்டு வெடிகுண்டை கடித்த எருமைமாடு பரிதாபமாக பலியானது. இந்த நாட்டு வெடிகுண்டை அங்கு போட்டது யார். எதற்காக தயார் செய்யப்பட்டது போன்ற விபரங்கள் தெரியவில்லை. போலீசாரும் பெயரளவில் வழக்கு பதிந்து நுனிப் புல் மேய்வதை போல் விசாரிப்பதாக கூறி நாட்களை கடத்துகின்றனர். இது போன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்வதோடு விட்டு விடுகின்றனர். இச் சம்பவம் பற்றி கேட்டால் சிம்பிளாக வேட்டைக்கு பயன்படுத்தப்படுவது,பெரிய விசயமல்ல என்று கூறுகின்றனர். வெடிபொருள் நடமாட்டத்தை கண்காணிக்கும் கியூ பிரிவு மாவட்டத்தில் இருக்கிறதா என்பதே தெரியவில்லை. வெடிப் பொருள்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை கியூ பிரிவு போலீசார் தான் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். ஆனால் வழக்கு பதிவில் ஆர்வம் காட்டுவதில்லை என புகார் கூறுகின்றனர். எனவே, மாவட்டத்தில் சமீப காலங்களில் அதிகரித்துள்ள நாட்டுவெடி குண்டு மற்றும் நாட்டு துப்பாக்கிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.