உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறார் திருமணங்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு! மாவட்ட அரசுத்துறை ஒருங்கிணைப்பில் சுணக்கம்

சிறார் திருமணங்களை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு! மாவட்ட அரசுத்துறை ஒருங்கிணைப்பில் சுணக்கம்

மாவட்டத்தில் 17 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் திருமணத்தை கட்டுப்படுத்த ஊராட்சி, நகராட்சி அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த குழுக்கள் பெயரளவில் மட்டுமே செயல்படுகின்றன. இக்குழுக்குளில் உள்ளூரை சேர்ந்தவர்கள், பலர் இடம் பெற்றுள்ளனர். தகவல் தெரிவித்தால் தங்களுக்கு பிரச்னை ஏற்படும் என பலரும் சிறார் திருமணங்கள் பற்றி வெளியே தெரிவிப்பது இல்லை. ஒரு சிலர் மட்டும் இலவச தொலைபேசி எண்ணான '1098' க்கு தகவல் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் ஆண்டிபட்டி, வருஷநாடு, பெரியகுளம், போடி ஆகிய வட்டாரங்களில் அதிக அளவில் சிறுமிகளுக்கு திருமணங்கள் நடக்கின்றன. இந்தாண்டு இதுவரை சுமார் 110 திருமணங்கள் நடந்துள்ளன. இதற்காக 80க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மற்றவை விசாரணையில் உள்ளன. இதில் திருமண ஏற்பாடுகள் செய்த சிறுமிகளின் பெற்றோர் 15 பேர் மீதும், திருமணம் செய்த சுமார் 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அவர்கள் குடும்பத்தினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பள்ளி மாணவிகள் சிலர் படிப்பை பாதியில் நிறுத்தி காதல் திருமணம் செய்வதும் அதிகரித்துள்ளது. சிறார் திருமணங்கள் ஜன., பிப்., ஏப்., மே மாதங்களில் அதிகம் நடக்கின்றன. மாணவிகள் 17 வயதிற்குள் கர்ப்பமடையும் போது அவர்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு உரிய மன, உடல் ஆரோக்கியம் இன்றி காணப்படுகின்றனர். இதனால் மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. ஒருங்கிணைப்பு இல்லை சிறார் திருமணத்தை தடுக்க பள்ளிக் கல்வித்துறை, குழந்தைகள் நலத்துறை, சமூக நலத்துறை, போலீசார் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். பள்ளியில் இருந்து இடை நிற்கும் மாணவிகளை தொடர்ந்து கண்காணித்தால் இதனை தடுக்கலாம். ஆனால் துறைகள் ஒருங்கிணைப்பில் சுணக்கம் தொடர்வதால் சிறார் திருமணங்களை தடுக்க முடிவதில்லை. இதனால் சிறுமிகள் கர்ப்பமடைந்து சிகிச்சைக்கு வரும் போது தான் திருமணம் நடந்ததே தெரிகிறது என சில அரசு துறையினர் புலம்பி வருகின்றனர். சிறார் திருமணத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ