வாரச்சந்தை நாளில் ரோட்டில் கடைகள் அமைப்பதால் இடையூறு; ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடியால் தவிப்பு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வாரச்சந்தைக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கடைகள் அமைக்காமல் ரோடு, நடைபாதையில் கடைகளை அமைப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.ஆண்டிபட்டி வாரச்சந்தை திங்கட்கிழமை தோறும் கூடுகிறது. வாரச்சந்தைக்கு 10 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது வாரச்சந்தை வளாகத்தில் காய்கறிகள் மொத்த ஏல வியாபார கடைகள், உழவர்சந்தை, தினசரி காய்கறி கடைகளும் செயல்படுகிறது. வாரச்சந்தை வியாபாரிகள் நலனை கருத்தில் கொண்டு 257 கடைகள் கொண்ட புதிய வணிக வளாகம் கட்டியும் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. வாரச்சந்தைக்கு ஆண்டிபட்டி நகர், பல்வேறு கிராமங்களில் இருந்து 5000 க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். தேனி, வெளி மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைக்கின்றனர். வாரச்சந்தை வளாகத்தில் காலை 6:00 மணிக்கு துவங்கும் ஆட்டுச் சந்தை காலை 10:00 மணிக்கு முடிகிறது. வாரச்சந்தையில் ஒவ்வொரு வியாபாரிக்கும் தனித்தனியாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளிடையே நிலவும் போட்டியால் வாரச்சந்தை வியாபாரிகள் கடைகளை நாடார் தெரு, கடைவீதி மற்றும் மெயின் ரோடுகளில் அமைக்கின்றனர். வாரச்சந்தை சென்று வர நாடார் தெரு, கடைவீதி மட்டுமே உள்ளது. ஏத்தக்கோவில் ரோட்டில் இருந்து வார சந்தைக்கு வரும் பாதை அடைபட்டதால் கடந்த சில ஆண்டுகளாக வாரச்சந்தை வளாகத்தில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. நடைபாதையில் ரோடுகளில் கடைகள் அமைப்பதால் வாகனங்களில் பொருட்களை ஏற்றி இறக்கி செல்ல முடியாமல் பலரும் திணறுகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் நெருக்கடி
வாரச்சந்தையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி கொச்சி - -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டி நகர் பகுதியிலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. தலைச்சுமை வியாபாரிகள், தள்ளுவண்டி கடைகளால் போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரிக்கிறது. இடையூறு ஏற்படும் வகையில் அமைக்கும் கடைகள் குறித்து பேரூராட்சி நிர்வாகம் போலீசாரும் கண்டு கொள்வதில்லை. இதனால் வாரச் சந்தை நாளில் ஆண்டிபட்டியில் பலரும் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். விரைவில் தீர்வு
பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது, 'வாரச்சந்தை வளாகத்தில் மட்டுமே கடைகள் அமைக்க வலியுறுத்தப்படுகிறது. வியாபாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. நடைபாதையில் அமைக்கும் கடைகளை கடந்துகுடியிருப்பு பகுதிக்கு செல்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும்,' என்றனர்.வாரச்சந்தை வியாபாரிகள் கூறியதாவது,'வாரம் ஒரு முறை வந்து செல்லும் வியாபாரிகளுக்கு போட்டியாக தினசரி கடைகளை வாரச்சந்தை வளாகத்திற்கு முன்பே அமைத்துக் கொள்கின்றனர். இதனால் வாரச்சந்தை வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ரோடுகள், நடைபாதையில் வாரச்சந்தை நாளில் கடைகள் அமைக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்', என்றனர்.