உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காப்புக்காடுகளில் அந்நிய நாட்டு செடிகளை அகற்றும் பணி தீவிரம்; மாவட்ட வனத்துறை வனச்சரகர்களுக்கு அறிவுறுரை

காப்புக்காடுகளில் அந்நிய நாட்டு செடிகளை அகற்றும் பணி தீவிரம்; மாவட்ட வனத்துறை வனச்சரகர்களுக்கு அறிவுறுரை

தேனி : தேனி மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகளில் அதிகளவில் பரவியுள்ள பிற தாவரங்களுக்கு தீங்கிழைக்கக்கூடிய அந்நியநாட்டு களைச்செடிகளான உண்ணிச் செடிகள், பார்த்தீனியம், சீமைக்கருவேல மரங்கள் ஆகியவற்றை அழிக்கும் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட வனத்துறை வனச்சரகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மாவட்டத்தில் உள்ள காப்புகாடுகளில் வன வள பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அந்நிய நாட்டு செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதில் யூக்லிப்டஸ், சீகை, பைன் உள்ளிட்ட அந்நிய நாட்டு தாவரங்கள் நிறைந்துள்ளன. இவ்வகை களைச் செடிகளால் வனவளம் பாதிக்கப்படுகிறது. இதனால் மொத்த உற்பத்தியில் தண்ணீர் 48 சதவீத குறைத்து விடுகின்றன. மேலும் உண்ணிச்செடிகள், பார்த்தீனியம், சீமைகருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி, பிற தாவரங்களுக்கு செல்லும் நீரின் தேவையை குறைத்து காற்றின் ஈரப்பத சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவ்வகை காரணங்களால் அந்நிய செடிகளை காப்புக்காடுகளில் இருந்து அகற்ற வனத்துறை மாநிலம் முழுவதும் உள்ள வனச்சரக அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன் படி மாவட்ட வன அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள தேனி, போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், கம்பம் மேற்கு உள்ளிட்ட 6 வனச்சரகர்களுக்கு அந்நிய களைச் செடிகளை அகற்ற மாவட்ட வன அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. வனக்காடுகள் 795.81 சதுர கி.மீ.,துாரம் அமைந்துள்ளது. அதில் 19 பகுதிகளில் காப்புக்காடுகள் 255.44 சதுர கி.மீட்டரில் 33.70 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமையாக அமைந்துள்ளது. இது தற்போது அதிகரித்து 43 ஆயிரம் எக்டேரில் பசுமை காடுகள் உள்ளன. இதனை 50 சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் முதற்கட்டமாக காப்புக்காடுகளில் பிற தாவரங்களுக்கு தீங்கிழைக்கக்கூடிய பார்த்தீனியம், சீமைகருவேல மரங்கள், உண்ணிச்செடிகள் என 12க்கும் மேற்பட்ட அந்நிய நாட்டு களைச் செடிகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்ட வன அதிகாரிகள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் முன்பிருந்த மழைப்பொழிவை மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சி இது. இதனை முழுமையாக நிறைவேற்றி அந்நிய களைச் செடிகள் அகற்றப்பட்டால் வனவளம் பெருகிவிடும். இதனால் பல்லுயிர் பெருக்கம் சீராகும். அதனால் வனவிலங்குகளுக்கான உணவுச்சங்கிலி தடை படாது. அதன் பின் நீரின் உற்பத்தியும் தொடர்ந்து வற்றாத ஜீவ நதியாக உருமாறிவிடும். இதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறோம்.'', என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை