உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நகர்ப்புற திட்டமிடல் விதிமீறி கட்டிய 22 கட்டடங்களுக்கு ‛நோட்டீஸ் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர் தகவல்

நகர்ப்புற திட்டமிடல் விதிமீறி கட்டிய 22 கட்டடங்களுக்கு ‛நோட்டீஸ் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர் தகவல்

தமிழ்நாடு நகர்புற திட்டமிடல் மற்றும் கட்டட நிர்மானங்களுக்கான விதிகளை மீறி கட்டிய 22 கட்டட உரிமையாளர்களுக்கு, கட்டுமான பணிகளை உடனே நிறுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.'' என, மாவட்ட நகர் ஊரமைப்புத் துறையின் உதவி இயக்குனர் ரேஷ்மா தெரிவித்துள்ளார். இத்துறையின் உதவி இயக்குனர் அலுவலகம் தேனி பெரியகுளம் ரோடு கான்வென்ட் பள்ளிக்கு எதிரே உள்ளது. இங்கு உதவி இயக்குனர் கட்டுப்பாட்டில் 2 மேற்பார்வையாளர்கள், நில அளவையர், பணியாளர்கள் உட்பட 12 பேர் பணியில் உள்ளனர். இத்துறையின் முக்கிய பணியாக மனைத்திட்டம், கட்டட அனுமதி வழங்குதல், நில பயன்பாட்டு உரிமை மாற்றுதலுக்கான அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர மத்திய அரசின் இரண்டாம் கட்ட அம்ருத் 2.0 துணை திட்டத்தில் மாஸ்டர் பிளான் வரையறை பணிகளும்,தீவிரமாக நடந்து வருகின்றன. தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி' பகுதிக்காக உதவி இயக்குனர் துறைரீதியிலான பணிகள், அடுத்து நடக்க உள்ள களப்பணிகள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடைமுறைகள் குறித்து அவர் கூறியதாவது: மாஸ்டர் பிளான்'என்றால் என்ன முழுமைத் திட்டம்' என்பது இதன் பொருள். அடுத்து வரும் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு நகர்புறங்களின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டமிடல் பணிகளைத்தான் மாஸ்டர் பிளான் என அழைக்கிறோம். தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் கிராம திட்டமிடல் சட்டம் 1971ல் படி சட்டசபை ஆதரவுடன் தயாரிக்கப்படும்திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் ஒரு நகரத்தின் பொருளாதாரம், வீட்டுவசதி, போக்குவரத்து கட்டமைப்புகள், சுகாதார கட்டமைப்பு, பொழுது போக்கு பூங்காக்கள். எவ்வாறு உருவாக வேண்டும் என்பதை திட்டமிடுவது ஆகும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நகர்புறங்களில் எந்த நில அளவை எண்ணில் என்ன நில பயன்பாடு அதாவது (குடியிருப்புக்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள்) இருக்க வேண்டும். என்ன மாதிரியான கட்டடங்கள் (தாழ்தள கட்டடமா, உயர் அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட வேண்டுமா என்பதை முன்பே கணித்து ஆய்வு செய்து, வரைபடம் மூலம் வரையறைகளை தயாரித்து அரசுக்கு பரிந்துரைக்கும் பணியாகும். மாவட்டத்தில் எந்தெந்த நகராட்சிகள் மாஸ்டர் பிளான் திட்டத்தில் இணைக்கப்பட்டு உள்ளன. தேனி அல்லிநகரம் நகராட்சி, பூதிப்புரம், வீரபாண்டி, வடவீரநாயக்கன்பட்டி, கோடாங்கிபட்டி, ஊஞ்சாம்பட்டி,தாடிச்சேரி, கொடுவிலார்பட்டி, பெருமாள் கோயில் கரடு (காப்புக்காடுகள்), சீலையம்பட்டி, கோட்டூர், உப்பார்பட்டி, தப்புக்குண்டு, பூமலைக்குண்டு உள்ளிட்ட பகுதிகளும்,கம்பம், உத்தமபுரம், ஆங்கூர்பாளையம், க.புதுப்பட்டி, காமயக்கவுண்டன்பட்டி, அனுமந்தன்பட்டி இணைக்கப்பட்டுள்ளன. போடி நகராட்சி, மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி, அணைக்கரைப்பட்டி ஊராட்சி இணைத்து முழுமைத்திட்டங்களின் கள ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. தேனி , கம்பம், போடி நகராட்சிகள் மூன்று முழுமை திட்டப் பணிகளும் 2ம் கட்ட அம்ருத் 2.0 திட்டப் பணிகளாகும். அடுத்தகட்ட அம்ருத் 2.0 திட்டங்களுக்கான நகரங்களில் சின்னமனுார், பெரியகுளம் இணைக்கப்பட உள்ளன. நீர்நிலைகள், காப்புக்காடுகள், இயற்கை சூழலுக்கு எதிராக இருக்கக்கூடாது என்பனஉள்ளிட்ட காரணங்களால் கூடலுார் பகுதியில் சுற்றுச்சூழல் மண்டலம் அதிகபடியாக வருவதால் அங்கு முழுமைத் திட்டப் பணிகள் துவக்கப்படாமல் உள்ளது. கட்டுமானங்களுக்கான அனுமதி பெறும் நடவடிக்கைகள் குறித்து துறையின் மூலம் கட்டுமானங்களுக்கு ஊரக பகுதிகளில் 10 ஆயிரம் சதுர அடி வரை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் கட்டட அனுமதி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை அனுமதி பெறுவது கட்டாயம். வணிக, தொழிற்சாலை கட்டடங்களுக்கு 2 ஆயிரம் சதுர அடி வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதியும், அதற்கு மேல் எங்கள் துறையில் அனுமதி பெறவேண்டும். இதில் விதிவிலக்காக கல்வி நிறுவனங்கள், கற்றல் மையங்கள் 5 முதல் 10 ஏக்கர் வரை கூட அனுமதி பெற, ஊரமைப்புத்துறையில் மட்டுமே ஆன்லைன் மூலம் ஒற்றை சாளர விண்ணப்பம் அனுமதி கோர வேண்டும். வீட்டு மனை வாங்குபவர், கட்டடம் கட்டுபவர் எவ்வாறு விழிப்புணர்வாக இருக்க வேண்டும். வீடு கட்ட வாங்கும் மனை அருகே குறைந்தபட்சம் 23 அடி அகலத்தில் ரோடு, தண்ணீர் வசதி, காற்றோற்றம் உள்ள பூங்கா, விளையாட்டு மைதானம்உள்ளிட்டவை இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த மாதிரி இடங்களுக்கு மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை அனுமதியும், உள்ளாட்சி அனுமதியும் பெற்றிருக்கிறார்களா என்பதை உருதிப்படுத்திய பின் இடம் வாங்க வேண்டும். வீடு கட்டுபவர்கள், கட்டட அனுமதி, ரியல் எஸ்டேட்நிறுவனங்களில் வீடோ, இடமோ வாங்கும்போது, எங்கள் துறையின் அனுமதியுடன், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதிபெறப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய பின் வாங்கவேண்டும். விதிமீறிய கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளதா ஆம். தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற திட்டமிடல் மற்றும் கட்டட நிர்மானங்களுக்கான விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 22 கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு, கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு நோட்டீஸ்'அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஆறு தொழிற்சாலை கட்டடங்கள், 16 வணிக கட்டடங்கள் விதிமீறி கட்டப்பட்டது கள ஆய்வில் கண்டறியப்பட்டன. அதன் உரிமையாளர்களுக்கு அனுமதி பெற அறிவுறுத்தியும், எவ்வித பதிலும் இல்லாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது., என்றார். கூடுதல் விபரங்களுக்கு gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியில், 04546 -- 252 022 என்ற தொலைபேசி எண்ணிலும் அலுவலகநேரத்தில் தொடர்புகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ