| ADDED : பிப் 18, 2024 01:48 AM
போடி: போடி அருகே சாலிமரத்துப்பட்டி கிராமத்திற்கு ரோடு, பஸ் வசதி இன்றி மாணவர்கள், பொதுமக்கள் தினமும் 2 கி.மீ., தூரம் நடந்து சென்று பஸ்சில் பயணம் செய்ய வேண்டிய நிலையால் சிரமம் அடைகின்றனர்.போடி ஒன்றியம், டொம்புச்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது சாலிமரத்துப்பட்டி. இங்கு 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள விவசாய கிராமம். இக் கிராமத்திற்கு போடி, தேனியில் இருந்து பஸ் வசதி இருந்தது. ரோடு அமைத்து 10 ஆண்டுகளுக்கு மேலாவதால் கற்கள் முழுவதும் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற ரோடாகி விட்டது. தற்போது டூவீலரில் கூட செல்ல முடியாத அளவிற்கு குண்டும், குழியமாக உள்ளன. ரோடுக்கான பாதை இருந்தும் போடி, தேனியில் இருந்து சாலிமரத்துப்பட்டிக்கு பஸ் வசதி இல்லை.இங்கு ஆரம்ப பள்ளி மட்டுமே உள்ளது. 6 ம் வகுப்பு மேல் படிக்கும் பள்ளி மாணவர்கள் அருகே உள்ள போடி, தேனிக்கு செல்ல வேண்டும். இக்கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் இங்கிருந்து 2 கி.மீ., தூரம் நடந்து அருகே உள்ள பத்திரகாளிபுரம் அல்லது தேனி ரோடு தீர்த்ததொட்டி பஸ் ஸ்டாப்பிற்கு சென்று பஸ் ஏற வேண்டியதுள்ளது. பொதுமக்கள், விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். மெயின் ரோட்டில் மின் கம்பங்கள் இருந்தும் விளக்கு வசதி இல்லை. இதனால் இரவில் பொதுமக்கள் நடந்த செல்ல முடியாமல் ஆட்டோவில் பயணம் செய்கின்றனர். பஸ், ரோடு வசதி செய்து தர அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. சேதம் அடைந்த ரோட்டை சீரமைத்து பஸ் வசதி செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரியுள்ளனர்.