| ADDED : ஜூன் 19, 2024 04:59 AM
தேனி : மாவட்டத்தில் உள்ள 80 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் விரைவில் நவீனமாகிறது. இத்திட்டத்தின் மூலம் சங்கங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கூட்டுறவுத்துறையினர் கீழ் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்படுகின்றன. இவை மூலம் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்குதல், உரம் விற்பனை, விவசாய கடன், நகை கடன் என பல்வேறு வகை கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கிராம மக்களுடன் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் நேரடி தொடர்பில் உள்ளன. கிராம பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை நவீனப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு 4 மாதங்களுக்கு முன் அறிவித்தது.இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 80 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு கம்ப்யூட்டர், பிரிண்டர், யூ.பி.எஸ்., வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறை பயன்பாட்டிற்கான சி.ஏ.எஸ்., எனப்படும் பொது செயலி சாப்டூவேர் பதிவேற்றும் பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக மாவட்டத்தில் ஜங்கால்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் தற்போது நவீனபடுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.அதிகாரிகள் கூறுகையில், வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் கணினிமயமாக்கப்படுவதால் காகிதப்பயன்பாடு குறையும். மேலும் வரவு, செலவுகள் அனைத்தும் ஆன்லைனில் பதிவேற்றப்படும். தற்போது உறுப்பினர்கள், கணக்கு வைத்திருப்பவர்கள், கணக்கு எண்கள் உள்ளிட்டவை பதிவேற்றும் பணி நடந்து வருகிறது.சில மாதங்களில் இப்பணி முழுவதும் முடிவடையும். அதன்பின் அலைபேசி மூலம் சங்க கணக்குகளில் உள்ள பணத்தை வாடிக்கையாளர்கள் கையாள இயலும். சங்கத்தினரும் கணக்குகளை எளிதாக பராமரிக்க இயலும் என்றனர்.