மூணாறு ஊராட்சி தலைவர் பதவியில் தொடர தேர்தல் கமிஷன் உத்தரவு
மூணாறு: மூணாறு ஊராட்சி தலைவர் தீபா ராஜினாமா விவகாரத்தில், அவர் தலைவராக தொடரலாம் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.மூணாறு ஊராட்சி காங்கிரஸ் வசம் உள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த 3ம் வார்டு உறுப்பினர் தீபா 2024 பிப்.15 முதல் தலைவராக இருந்தார். அவர் கடந்த மார்ச் 29ல் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கட்சி முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஊராட்சி செயலர் உதயகுமாரிடம் வழங்கிய சிறிது நேரத்தில் தன்னை வற்புறுத்தி பொறுப்பை ராஜினாமா செய்ய வைத்ததாக செயலரிடம் புகார் அளித்தார். ராஜினாமா கடிதத்தில் தன்னுடைய கையெழுத்து போலியாக பயன்படுத்தப்பட்டதாக தேர்தல் கமிஷனில் புகார் அளித்தார். இது தொடர்பாக தலைவர், செயலர் ஆகியோர் ஏப்.7ல் தேர்தல் கமிஷனில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.அதில் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி செயலர் முன்பாக தலைவர் கையெழுத்திட வேண்டும் என்ற விதிமுறை மீறப்பட்டதாக தெரியவந்தது. அதனால் தீபாவின் ராஜினாமா செல்லாது என்பதால், அவர் தலைவராக தொடரலாம் என தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.அதன்படி தீபா நேற்று மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்றார்.மூணாறு ஊராட்சி 21 வார்டுகளை கொண்டது. அதில் 8, 17 ஆகிய வார்டு உறுப்பினர்கள் கட்சி தாவல் தடை சட்டத்தில் தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்தது. தற்போது காங்கிரஸ் வசம் உள்ள ஊராட்சியில் காங்., கூட்டணி 11, இடதுசாரி கூட்டணி 8 என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ளனர்.