உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் கம்பமெட்டு ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்

போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் கம்பமெட்டு ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்

கம்பம்: கம்பமெட்டு ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற நெடுஞ்சாலைத் துறையினர், போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் திரும்பிச் சென்றனர். கம்பத்தில் இருந்து கேரளாவை இணைக்கும் முக்கிய ரோடாக கம்பமெட்டு ரோடு உள்ளது. சுமார் ஒரு கி.மீ., துாரம் உள்ள இந்த ரோட்டின் 2 பக்கங்களும் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகளாக மாறி உள்ளன. இரு மாநில போக்குவரத்து நடைபெறும் இந்த ரோட்டில் குறிப்பிட்ட சில சர்வே எண்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. குறிப்பாக 5 சர்வே எண்களில் உள்ள 20 வீடுகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. கடந்த மாதம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது, எதிர்ப்பு கிளம்பியது. மேலும் உத்தமபாளையம் ஆர்.டி.ஒ., செய்யது முகமது தலையிட்டு, முழுமையாக சர்வே செய்து அகற்ற கேட்டுக் கொண்டார். அதிகாரிகளும் திரும்பிச் சென்றனர். ஆனால் நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். ஆனால், போலீசார் விநாயகர் ஊர்வலத்திற்கு பாதுகாப்பிற்கு சென்று விட்டதால், போலீஸ் பாதுகாப்பு இல்லாத நிலையை சுட்டிக்காட்டி திரும்பி சென்றனர். பின்னர் குறிப்பிட்ட இடங்களில் உள்ள மின் இணைப்பை துண்டிக்க முற்பட்ட போது, அப்பகுதி மக்கள் விடவில்லை. எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேறு வழியின்றி திரும்பிச் சென்றனர். இந்த ரோட்டில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்திற்கு மேற்கு பக்கம் 20 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும், கடைகளையும் இடிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.ஆனால் பொதுமக்களோ, ''மலையடிவாரத்தில் இருந்து கம்பமெட்டு ரோடு ஆரம்பமாகும் இடம் வரை முழுமையாக சர்வே செய்து ஆக்கிரமிப்பை அகற்றுங்கள். குறிப்பிட்ட சிலரை மட்டும் குறி வைப்பது ஏன்'', என்கின்றனர். அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தொடர்ந்த வழக்கின் பேரில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவை முதலில் நிறைவேற்ற வேண்டும். அதன் பின் முழுமையாக சர்வே செய்து அகற்றலாம். வரும் செப்.4ல் கண்டிப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !