மஞ்சளாறு அணை பகுதியில் 20 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு; மீட்க ஆர்வமில்லாத வருவாய் துறை அதிகாரிகள்
தேனி : தேனி மாவட்டம், மஞ்சளாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெற்றதாக 2021ல் அப்போதைய பெரியகுளம் சப்-கலெக்டர் கண்டுபிடித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அவர் மாறுதலாகி சென்ற பின் அதனை மீட்க வருவாய் துறை நடவடிக்கை எடுக்க வில்லை என சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டி, கெங்குவர்பட்டி பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை சிலர் அதிகாரிகள் துணையுடன் பல நுாறு ஏக்கர் நில அபகரிப்பு செய்ததை 2021ல் பெரியகுளம் சப்கலெக்டர் ரிஷப் கண்டுபிடித்தார். ஆக்கிரமிக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் பற்றிய அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் பல பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட 182 ஏக்கர் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த ஆர்.டி.ஓ.,க்கள் தாசில்தார்கள், வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் மோசடியில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் என இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டு சிலர் ஜாமினில் உள்ளனர்.இதே போல் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்கள் பயன்பெறும் மஞ்சளாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 20 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றுள்ளதை சப் கலெக்டர் ரிஷப் கண்டுபிடித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.இந்நிலையில் அவர் பணி மாறுதலாகி சென்றதால் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு என அடையாளம் காட்டப்பட்ட இடத்தை வருவாய் துறையினர் மீட்க தற்போது வரை ஆர்வம் காட்டவில்லை. அணை, நீர் வரத்துபகுதி, நீர் பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.