உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி மருத்துவக் கல்லுாரியில் மாணவர்களுக்கான கண்காட்சி

தேனி மருத்துவக் கல்லுாரியில் மாணவர்களுக்கான கண்காட்சி

ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கான பதப்படுத்தப்பட்ட உடல் மாதிரிகள், உடல் உறுப்புகள் குறித்த கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது.கல்லூரியின் முதலாம் ஆண்டு உடற்கூறுயியல், உடல் இயங்கியல், உயிர் வேதியியல் துறைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை தேனி மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் துவக்கி வைத்தார். முழு உடலையும் பாதுகாக்க கூடிய பிளாஸ்டினேசன் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தை கல்லூரி முதல்வர் முத்துசித்ரா துவக்கி வைத்தார். இக் கண்காட்சியில் பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் மனித உடலின் உள், வெளி உறுப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. உறுப்புகளின் விபரம், செயல்பாடுகள் குறித்து முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு விளக்கினர்.முதல்வர் முத்து சித்ரா கூறியதாவது: உடல் கூறுயியல் துறை, உடல் இயங்கியல் துறை, மற்றும் உயிர் வேதியல் துறைகளில் மாணவர்கள் என்னென்ன படிக்கப் போகிறார்கள் என்பது தொடர்பான மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு இந்த கண்காட்சி மருத்துவ படிப்பு தேர்வு செய்வதற்கு உந்துதலாக அமையும். ஜூலை 2, 3, 4 தேதிகளில் மாணவர்கள் கண்காட்சியை பார்வையிடலாம் என்றார்.உடற்கூறுயியல் துறை தலைவர் டாக்டர் எழிலரசன் கூறியதாவது:முழு உடலையும் பிளாஸ்டினேசன் தொழில்நுட்பத்தில் நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்க முடியும். கதிரியக்கவியல் துறையைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பயன்படும் விதமாக பதப்படுத்தப்பட்ட முழு உடலையும் பிளாஸ்டினேசன் முறையில் உடலின் குறுக்கு வெட்டு மாதிரி கல்லூரியில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது என்றார். துவக்க விழா நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர் தேன்மொழி, நிலைய மருத்துவ அலுவலர் சிவகுமரன், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் மணிமொழி, ஈஸ்வரன் மற்றும் மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !