பெரியாறு அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி! நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை
பெரியாறு அணை நீரை நம்பி கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப் பரப்பில் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் அணையில் நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும். 130 அடியை கடந்து இருந்ததால் ஜூன் 1ல் நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 2021ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 5 ஆண்டுகள் அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் இரு போக நெல் சாகுபடியை முழுமையாக செய்ய முடிந்தது. அதேபோல் இந்த ஆண்டும் தற்போது வரை நீர்மட்டம் 130 அடியைக் கடந்து இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 135 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 732 கன அடியாகவும், குடிநீர் மற்றும் முதல் போக நெல் சாகுபடிக்கு நீர் திறப்பு 1000 கன அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு 5878 மில்லியன் கன அடியாகும். விவசாயிகள் கூறும்போது: தற்போது அணையில் இருக்கும் நீர் இருப்பு முதல் போக நெல் சாகுபடியை முழுமையாக செய்வதுடன், இரண்டாம் போக சாகுபடிக்கும் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளுக்கு போதுமானதாகும். தொடர்ந்து நவம்பரில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். அதனால் இந்த ஆண்டும் இரு போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்றனர்.