நெல் கொள்முதல் செய்வதில் தாமதம்; ரோட்டில் கொட்டி விவசாயிகள் மறியல்
தேவதானப்பட்டி : மேல்மங்கலத்தில் நெல் கொள்முதல் செய்வதில் நுகர்பொருள் வாணிபகழகம் காலதாமதம் செய்வதை கண்டித்து, விவசாயிகள் நெல்மணிகளை ரோட்டில் கொட்டி ரோடு மறியலில் ஈடுபட்டனர். பெரியகுளம் தாலுகா மேல்மங்கலம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இரண்டாம் போகத்திற்கான நெல் நடவு செய்து தற்போது அறுவடை செய்யப்பட்டது. அறுவடை செய்த நெல்லை ஒரு மாதத்திற்கும் மேல் ஈஸ்வரன் கோயில் அருகே மேல்மங்கலம் கொள்முதல் நிலையம் 2 ல் கொண்டு வரப்பட்டது. நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்வதற்காக ரோட்டோரம் மற்றும் தென்னந்தோப்பு மையத்தில் கொட்டப்பட்டது. நெல்லை எடை போட்டு, மூடை போடுவதில் கொள்முதல் நிலையம் ஆர்வம் காட்டவில்லை. விவசாயிகள் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இதனால் ஒரு மாதமாக ரோட்டில் 10 டன்னுக்கும் அதிகமாக நெல் மணிகள், வெயிலுக்கும் சாரல் மழைக்கும் சேதமடைந்தது. விவசாயிகள் ஆத்திரமடைந்து நேற்று மேல்மங்கலம் பெரியகுளம் ரோட்டில் டிராக்டரில் நெல் மணிகளை தார்பாய் விரித்து கொட்டினர். விவசாயிகள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. இதனை தொடர்ந்து சப் --கலெக்டர் ரஜத்பீடனை விவசாயிகள் சந்தித்தனர். சப்- கலெக்டர் அனைத்து நெல்லையும் எடை போடும் படி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து எடைபோடும் பணி நடந்து வருகிறது. விவசாயி பாண்டியன் கூறுகையில்,'நெல் கொள்முதல் செய்யாததால், சில இடங்களில் நெல் கலர் குறைந்துள்ளது. அதிகாரிகள் பாகுபாடு பார்க்காமல் அனைத்து நெல்மணிகளை கொள்முதல் செய்து, உடனடியாக பணம் பட்டுவாடா செய்யவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.-