நிலத்தில் பதித்த ஆபத்தான உயர் மின் அழுத்த கேபிளால் அச்சம்
மூணாறு : இடமலைகுடி ஊராட்சியில் நிலத்தடியில் பதிக்கப்பட்ட உயர் மின் அழுத்த கேபிள் முறையாக பராமரிக்காததால் மலைவாழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மூணாறு அருகே அடர்ந்த வனத்தினுள் உள்ள இடமலைகுடி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கின்றனர். அங்கு 24 குடிகளில் (கிராமம்) மலை வாழ் மக்கள் வசிக்கின்ற போதும் இடலிபாறைகுடி, சொசைட்டிகுடி, ஆண்டவன் குடி, ஷெட்குடி ஆகிய பகுதிகளுக்கு மட்டும் சமீபத்தில் மின்சாரம் வழங்கப்பட்டது. அதற்கு ராஜமலை பெட்டிமுடி பகுதியில் இருந்து கிராமங்கள் வரை உயர் மின் அழுத்த கேபிள் நிலத்தடியில் பதித்து மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. அவை முறையாக பதிக்காததால் பல பகுதிகளில் வெளியில் தெரியும்படி உள்ளன. ஊராட்சியின் தலைமையிடமான சொசைட்டிகுடியில் ரோட்டில் கேபிள் முறையாக பதிக்காததால் மழையில் மண் அரிப்பு ஏற்பட்டு வெளியில் தெரிகின்றன. அவை பல இடங்களில் வாகனங்கள், வனவிலங்குகள் ஆகியவற்றால் சேதப்படுத்தப்பட்டு சிதைந்து உள்ளதால் மின் கம்பிகள் ஆபத்தாக உள்ளன. அதனை உணராமல் சிறுவர் உள்பட அனைவரும் கடந்து செல்கின்றனர். சேதமடைந்த கேபிளை சீரமைக்குமாறு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மலைவாழ் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.