வெள்ளத்தில் பாதித்த விவசாயிகள் நிவாரணம் பெறுவதில் சிக்கல்
கம்பம்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குத்ததை, ஒத்தி பெற்று சாகுபடி செய்த நெல் விவசாயிகள் நிவாரணம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அக். 17ல் பெய்த கன மழையால் கம்பம் பள்ளத்தாக்கில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டது. அதன் பேரில் வேளாண் துறை, வருவாய் துறை, புள்ளியியல் துறை உள்ளிட்ட பல துறையினர் இணைந்து கணக்கெடுத்து வருகின்றனர். இக் கணக்கெடுப்பில் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட நில ஆவணங்களில் அடங்கலில் யார் பெயர் உள்ளதோ அவர் பெயருக்கு தான் நிவாரணம் கிடைக்கும். அடங்களில் உள்ளவரின் வங்கி கணக்கில் தான் நிவாரண தொகை வரவாகும். பெரும்பாலான நிலங்கள் ஒத்தி, குத்தகை பெற்று பலர் விவசாயம் செய்கின்றனர். உரிமையாளர் ஒருவர், சாகுபடி செய்பவர் மற்றொருவராக உள்ளனர். சாகுபடி செய்பவரின் பெயர் அடங்கலில் இடம் பெறாது. நில உரிமையாளரின் பெயர் தான் அடங்கலில் இருக்கும். எனவே நிவாரண தொகை சாகுபடி செய்பவருக்கு போய் சேராது. உரிமையாளரிடம் ஆவணங்களை கேட்கவும் வாய்ப்பில்லை. இதனால் பல விவசாயிகள் நிவாரணம் பெற முடியாத நிலை எழுந்துள்ளது.