| ADDED : மார் 06, 2024 04:35 AM
கம்பம் : கம்பம் வாரச் சந்தை, தினசரி சந்தையில் கட்டணம் வசூல் செய்யும் உரிமத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட டிபாசிட் ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக குறைக்க கம்பம் நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது.கம்பம் நகராட்சி அவசர கூட்டம் தலைவர் வனிதா தலைமையில் நடந்தது. கமிஷனர் வாசுதேவன், பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ் கலந்து கொண்டனர்.கம்பம் வாரச்சந்தை ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. சந்தை திறக்காமல் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் தமிழக முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார். ஆனால் அதற்கு முன்பே சந்தையில் கட்டணம் வசூல் செய்ய உரிமம் வழங்க ஏலம் விடப்பட்டது. 12 முறை ஏல அறிவிப்பு செய்தும், ஒருவர் கூட ஏலம் எடுக்க முன்வரவில்லை.இதற்கு காரணம் டிபாசிட் ரூ.60 லட்சம் என்றும், கூடுதல் டெபாசிட் ரூ.20 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இத் தொகை அதிகம் என கூறி ஏலதாரர்கள் ஏலம் எடுக்க முன்வரவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் டிபாசிட் ரூ.60 லட்சத்தை 40 லட்சமாகவும், கூடுதல் பொறுப்புத் தொகை ரூ.20 லட்சத்தை 15 லட்சமாகவும் குறைத்து அறிவிப்பு வெளியிட நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 12 முறை ஏலம் விட்டும் யாரும் எடுக்க முன்வராததால், டெபாசிட் தொகை குறைப்பு தீர்மானத்தை கவுன்சிலர்கள் ஏற்று தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.