உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணை நீர்த்தேக்கத்தில் செடிகளுடன் மிதக்கும் குப்பை

வைகை அணை நீர்த்தேக்கத்தில் செடிகளுடன் மிதக்கும் குப்பை

ஆண்டிபட்டி: வைகை அணை நீர் தேக்கத்தில் ஆகாயத்தாமரை செடிகளுடன் மிதக்கும் குப்பையால் தண்ணீரின் தன்மை பாதிக்கிறது. வைகை அணைக்கு முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கும். ஆற்றின் கரையோரங்களில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியாகும் குப்பை கழிவு நீர் அனைத்தும் அந்தந்த பகுதி ஆற்றில் சேர்கிறது. ஆற்றை சுத்தமாக பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை. ஆற்றை அசுத்தப்படுத்துபவர்கள் மீது அரசும் நடவடிக்கை எடுப்பதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக நீர்வரத்து இல்லாத ஆறுகளில் ஆங்காங்கே குவிந்த குப்பை, பல இடங்களில் வளர்ந்த ஆகாயத்தாமரை செடிகள் வெள்ள நீருடன் அடித்துச் செல்லப்பட்டு வைகை அணையில் சேர்ந்துள்ளது. நீர்த்தேக்கத்தில் சேர்ந்த ஆகாய தாமரை செடிகள், குப்பை ஆகியவை தற்போது அணையில் நீர் வெளியேறும் மதகு பகுதி மற்றும் அணையின் கரையோரங்களில் அதிகமாக ஒதுங்கி வருகிறது. ஒதுங்கி நிற்கும் குப்பையை அப்புறப்படுத்தும் நடவடிக்கையும் இல்லை. நீரில் மிதக்கும் குப்பையால் சுற்றுச்சூழலுக்கும் நீருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வைகை அணை நீரை மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீருக்காக ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படு கிறது. வைகை அணை நீர்த்தேக்கத்தில் குப்பை சேர்வதை தடுக்கவும், ஆறுகளை ஆண்டு முழுவதும் பாதுகாக்கவும் ஐந்து மாவட்ட நிர்வாகங்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ