கும்பக்கரை அருவியில் உயிர் பலி தவிர்க்க கேட் அமைப்பு
பெரியகுளம், : கும்பக்கரை அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் யானைகஜம் பாறையில் சுற்றுலா பயணிகள் இழுத்து சென்று உயிர்பலியாவதை தடுக்க 'கேட்' அமைக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் அருகே 8 கி.மீ., துாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதி பாம்பார்புரம், வட்டக்காணல், வெள்ளக்கெவி பகுதியில் பெய்யும் மழை, அருவி பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. மழை பெய்யாததால் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் பெய்த சாரல் மழையால் ஓரளவு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால் நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். 'கேட்' அமைப்பு அருவியில் குளிக்கும் போது கடந்த காலங்களில் திடீர் வெள்ளப் பெருக்கினால் பாறையில் உருண்டு, யானை கஜம் தடுப்பு பாறையில் மோதி 5 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயப்பட்டுள்ளனர். இதனை தடுக்க வனத்துறை நிர்வாகம் அருவியின் வலது புறத்தில் இருந்து இடது புறம் 25 அடி நீளம், 15 அடி உயரத்திற்கு தண்ணீரின் நடுவே கேட் அமைத்து உள்ளனர். இதனால் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், சுற்றுலாப் பயணிகள் பாறைகளில் உருண்டு, இழுத்து செல்வது தடுக்கப்படும்.