உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணை நீரில் பச்சை பாசி படலம்; பாதிப்பில்லை என்கிறது நீர்வளத்துறை

வைகை அணை நீரில் பச்சை பாசி படலம்; பாதிப்பில்லை என்கிறது நீர்வளத்துறை

ஆண்டிபட்டி; வைகை அணை நீர் தேக்கத்தில் சில நாட்களாக பச்சை பாசி படலம் ஏற்பட்டு வருகிறது. ஆனால் நீரில் மிதக்கும் பாசி படலத்தால் பாதிப்பில்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.வைகை அணைக்கு பெரியாறு, தேனி முல்லை ஆறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கும். தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் கிடைக்கும் நீர் அணையில் தேக்கப்பட்டு, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட பாசனம் மற்றும் குடிநீருக்காக ஆண்டு முழுதும் பயன்படுத்தப்படுகிறது.வைகை அணை நீரில் வளரும் மீன்கள் ஒப்பந்ததாரர் மூலம் பிடிக்கப்பட்டு ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வைகை அணை நீர்த்தேக்கத்தில் முழு அளவான 71 அடி நீர் தேங்கினால் நீர்த்தேக்கம் 10 சதுர மைல் பரப்பில் பரந்து விரிந்திருக்கும். மழை இன்மையால் வைகை அணைக்கான நீர் வரத்து சில வாரங்களாக வினாடிக்கு 100 கன அடிக்கும் குறைவாகவே உள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 58.99 அடியாக உள்ளது.இந்நிலையில் அணை நீர்த்தேக்கத்தில் சில நாட்களாக பச்சை பாசி படலம் மிதக்கிறது.பாசி படலத்தால் தண்ணீருக்கும் மீன்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என மக்கள் அச்சம் தெரிவித்தனர்.அணை நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கோடையில் அணையில் நீர் இருப்பு குறையும். நீர்வரத்தும் குறைவதால் வழக்கமாக பாசி படலம் ஏற்படும். ஒவ்வொரு மாதமும் நீர் தேக்கம், அணை சுரங்கத்தில் கசியும் நீர், அணையில் இருந்து வெளியேறி ஆற்றில் செல்லும் நீர் ஆகியவற்றின் மாதிரி எடுத்து சென்னை பரிசோதனை மையத்திற்கு அனுப்பப்படுகிறது.தண்ணீருக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ, தன்மை மாறினாலோ சோதனையில் தெரிந்து விடும். தற்போது அணை நீரில் மிதக்கும் பச்சை பாசி படலத்தால் பாதிப்பில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை