குரங்கணியில் கன மழை: அணைப்பிள்ளையார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
போடி, : கேரளா, குரங்கணி பகுதியில் நேற்று முன் தினம் இரவு இடியுடன் பெய்த கன மழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதோடு, அணைப் பிள்ளையார் அணையில் நீர் அருவியாய் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.போடி பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 7 நாட்களாக கேரளா, குரங்கணி, கொட்டக்குடி பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு போடி, சிலமலை, ராசிங்கபுரம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.முந்தல் ரோட்டில் உள்ள அணைப் பிள்ளையார் அணையில் தடுப்பணையை தாண்டி நீர் அருவியாய் கொட்டி வருகிறது. இதனை ஒட்டி பள்ளிக் கல்லுாரி விடுமுறை என்பதால் பொது மக்களும், கேரளா செல்லும் சுற்றுலாப் பயணிகளும் குளித்து வருவதோடு, அலைபேசியில் செல்பி எடுத்தும் மகிழ்ந்து சென்றனர்.