கொடிக்கம்பங்களை அகற்ற ஒத்துழைக்காத நெடுஞ்சாலைத்துறை நகராட்சி அதிகாரிகள் புலம்பல்
தேனி: தேனி நகரில் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள கொடிக்கம்பங்கள், பீடங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் ஒத்துழைக்க மறுப்பதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் ரோட்டோரங்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றிட சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை ஜனவரியில் உத்தரவிட்டது. அதன்படி ஏப்.,ல் அகற்றியிருக்க வேண்டும். ஆனால், மாவட்டத்தில் கட்சியினர் மற்றும் அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஏப்.,30க்குள் அகற்ற வலியுறுத்தப்பட்டது. ஆனால், பல இடங்களில் கொடிக்கம்பங்கள் அகற்றப்படவில்லை.அதன்பின் பெரியகுளம் ரோட்டில் கொடிகம்பங்கள் அகற்றும் பணியை நகராட்சியினர் துவங்கினர். ஆரம்பம் முதலே மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை. தற்போது தேனி மதுரை ரோடு, பெரியகுளம் ரோட்டில் பல இடங்களில் கொடிகம்பங்கள், அவை இருந்த பீடங்கள் இடையூறாக உள்ளன.இதுபற்றி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஆரம்பத்தில் சில கட்சியினர் பீடங்களை அகற்றி கொள்ள அவகாசம் கேட்டனர். அதற்குள் அவற்றை அகற்றவில்லை. தற்போது பீடம், கொடிகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினரை அழைத்தால் 'கல்வெட்டுகளில் முதல்வர் பெயர், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பெயர் உள்ளன' இதனால் பிரச்னை வரும் என கூறி வர மறுக்கின்றனர். இதனால் கொடிக்கம்பங்கள், பீடங்களை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றனர்.