மேலும் செய்திகள்
கேரளாவில் விஷவாயு தாக்கி தமிழக தொழிலாளர்கள் பலி
03-Oct-2025
மூணாறு : இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் கழிவறை தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் பலியான சம்பவம் குறித்து இடுக்கி கலெக்டர் தினேசன்செருவாட் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். கட்டப்பனை, புளியன்மலை ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் ஒரு மாதமாக பராமரிப்பு பணிகள் நடந்தது. அங்குள்ள கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய தேனி மாவட்டம் கம்பம் விவேகானந்தன் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் 48, ஒப்பந்தமிடப்பட்டார். அதன்படி அவர் உள்பட ஆறு தொழிலாளர்கள் செப்.30ல் இரவில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கழிவுநீர் தொட்டி அருகில் உள்ள ஆள் இறங்கும் குழி வழியாக இறங்கிய கூடலூரைச் சேர்ந்த மைக்கிள் 23, மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்றச் சென்ற கீழ் கூடலூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் 37, மயங்கியதால், இருவரையும் மீட்க சென்ற ஜெயராமனும் மயங்கி விழுந்தார். மூவரும் விஷ வாயு தாக்கி இறந்தனர். ஆள் இறங்கும் குழி மிக குறுகலானது என்பதால் மூவரையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. கட்டப்பனை போலீசார், தீயணைப்பு துறையினர் கழிவு நீர் தொட்டி அருகில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் வேறொரு பள்ளம் தோண்டி ஒன்றரை மணி நேரம் போராடி மூன்று பேரின் உடலை மீட்டனர். கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்து மூவரும் இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் மீது கட்டப்பனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அறிக்கை தாக்கல் ஓட்டலில் கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டதில் ஏதேனும் குளறுபடி நடந்துள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இடுக்கி கலெக்டருக்கு உத்தரவிட்டது. அதன்படி கலெக்டர் தினேசன் செருவாட் விசாரித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அலட்சியம்: கட்டப்பனையில் ஜெயராமன் பல ஆண்டுகளாக கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்தல் உள்பட பல்வேறு தூய்மை பணிகளை ஒப்பந்தம் அடிப்படையில் செய்துள்ளார். அதனால் அவரை கட்டப்பனை நகராட்சி தூய்மை பணியாளராக அங்கீகரித்து 2024ல் நவம்பரில் பாதுகாப்பு பெல்ட், ஆக்சிஜன் மாஸ்க் உள்பட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது. அவற்றை எதுவும் பயன்படுத்தாமல் அலட்சியமாக பணியில் இறங்கியதால் மூவர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
03-Oct-2025