நாய்களுக்கு பார்வோ வைரஸ் பாதிப்பு சிகிச்சை பெற வருவது அதிகரிப்பு
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் 'பார்வோ வைரஸ்' பாதித்த நாய்கள் கால்நடை மருந்தகங்களுக்கு சிகிச்சைக்கு வருவது அதிகரித்துள்ளது.மழை காலங்களில் நாய்களுக்கு பார்வோ வைரஸ் தாக்குதல் காணப்படும். இந்த வைரஸ் பாதித்த நாய்கள் உணவு எடுத்துக் கொள்ளாது. வாந்தி எடுக்கும், ரத்தத்துடன் வயிற்றுப் போக்கு வெளியேறும். சோர்வாக இருக்கும். தண்ணீர் அருந்தாது. இப் பாதிப்பிற்கு சிகிச்சையளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும். கம்பம் பகுதியில் பார்வோ வைரஸ் பாதிப்பு தற்போது அதிகம் காணப்படுகிறது. இங்குள்ள கால்நடை மருந்தகத்திற்கு தினமும் 10 நாய்கள் வரை சிகிச்சைக்கு கொண்டு வரப்படுகிறது. தெரு நாய்களுக்கும் இப் பாதிப்பு உள்ளது. வீட்டில் வளர்க்கும் நாய்களில் பப்பீஸ் வகை நாய்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கம்பம் கால்நடை மருந்தக டாக்டர் செல்வம் கூறுகையில், 'மழை காலங்களில் பார்வோ வைரஸ் தாக்குதல் இருக்கும். இதை தவிர்க்க குட்டி பிறந்தவுடன் 45 நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும். பின் 21 நாளில் பூஸ்டர் ஊசி செலுத்த வேண்டும்.இதனை பின்பற்றினால் பார்வோ வைரஸ் தாக்காது. தற்போது பார்வோ வைரஸ் பாதித்த நாய்கள் அதிகம் சிகிச்சைக்கு வருகிறது. 3 வகையான ஆன்டிபயாடிக் மற்றும் குளுகோஸ் ஏற்றி குணப்படுத்தி அனுப்பி வருகிறோம் என்றார்.