பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1339 கன அடியாக அதிகரித்தது.ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் கூடுதலாக பெய்யவில்லை. சமீபத்தில் துவங்கிய வடகிழக்கு பருவமழை கை கொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் அவ்வப்போது மழை பெய்வதும், பின் குறைவதுமாக உள்ளது. நேற்று அதிகபட்சமாக பெரியாறு அணையில் 75.2 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு வினாடிக்கு 719 கன அடியாக இருந்த நீர்வரத்து 1339 கன அடியாக அதிகரித்தது. தமிழகப் பகுதிக்கு 1100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3281 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் 123.30 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி).