முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு - கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1733 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்பில் துவங்கி வைகை அணை வரையுள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்குப் பருவ மழை முடிவடைந்து, வடகிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. குறைந்து வந்த அணையின் நீர்மட்டம் மழையால் 2 நாட்களில் ஒரு அடி உயர்ந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 132 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). பெரியாறில் 6 மி.மீ., தேக்கடியில் 10.6 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2748 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்ப் பிடிப்பில் மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் சாகுபடிக்காக 1000 கன அடியாக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் 1733 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் இருப்பு 5176 மில்லியன் கன அடியாகும். நேற்று முழுவதும் மேகமூட்டத்துடன் அவ்வப்போது மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது. எச்சரிக்கை நீர்மட்டம் அதிகரித்து வருவதால் தமிழகப் பகுதிக்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், லோயர்கேம்பில் துவங்கி வைகை அணை வரையுள்ள ஆற்றின் கரையோரப் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். மின் உற்பத்தி அதிகரிப்பு தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு 1733 கன அடியாக அதிகரிக்கப்பட்டதால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மூன்று ஜெனரேட்டர்களில் 90 மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி, தற்போது நான்கு ஜெனரேட்டர்களில் தலா 39 மெகாவாட் வீதம் 156 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.