| ADDED : டிச 26, 2025 02:39 AM
ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து கடந்த சில மாதங்களாக பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நேற்று மாலை 4:00 மணிக்கு முற்றிலும் நிறுத்தப்பட்டது. வைகை அணைக்கு முல்லைப் பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு மூல வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கும். தேனி மாவட்டத்தில் பெய்த மழை, பெரியாறு அணை நீர் வரத்தால் இந்தாண்டு அக்.27ல் வைகை அணை நீர்மட்டம் 70.24 அடிவரை உயர்ந்தது. மொத்த உயரம் 71 அடி. வைகை அணையில் இருப்பில் இருந்த நீர் கடந்த சில மாதங்களாக திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனம், குடிநீருக்காக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 54.79 அடியாக குறைந்துள்ளது. சிவகங்கை மாவட்டப் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் ஆற்றின் வழியாக சென்ற நீர் நேற்று காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 700 கன அடி வீதம் திறக்கப்பட்ட நீர், நேற்று மாலை 4:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. நேற்று அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 365 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தற்போது மதுரை, தேனி, ஆண்டிபட்டி சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது.