மல்லிகை உற்பத்தி 99 சதவீதம் வீழ்ச்சி
ஆண்டிபட்டி; தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல இடங்களில் உற்பத்தி 99 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனுார், டி.பொம்மிநாயக்கன்பட்டி, ராஜகோபாலன்பட்டி, ஏத்தக்கோவில் உட்பட பல கிராமங்களில் மல்லிகை சாகுபடி உள்ளது. சில வாரங்களுக்கு முன் பெய்த தொடர் மழை, தற்போது நிலவும் பனியால் விளைச்சல் பாதித்துள்ளது. பூக்கள் விலை கிலோ 1,500 முதல் 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.மொத்தத்தில், இந்த பகுதியில், 1 சதவீதம் மல்லிகைப்பூ உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளது.விவசாயிகள் கூறியதாவது:மல்லிகை பூக்கள் விளைச்சலுக்கு வெயில் காலம் ஏற்றது. தற்போது பகலில் வெயில் இருந்தாலும், இரவில் பனிப்பொழிவு கூடுதலாக இருப்பதால் செடிகளில் பூக்கள் வருவதில்லை. மார்கழி, சபரிமலை சீசனால் பூக்களின் தேவை அதிகம் உள்ளது. விலை இருந்தும் விளைச்சல் பாதிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்கு வெயில் காலங்களில் தினமும் 5 முதல் 8 டன் அளவில் மல்லிகை பூக்கள் வரத்து இருக்கும். தற்போது தினமும் 10 கிலோ அளவில் கூட வரத்து இல்லை. முல்லை, ஜாதிப்பூக்கள் வரத்தும் குறைவாகவே உள்ளது.