கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணி தீவிரம் டிச., கும்பாபிேஷகம் நடத்த முடிவு
கம்பம் : கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணிகளை முழு வீச்சில் நடத்தி டிசம்பரில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. சிவனும், பெருமாளும் ஒரே வளாகத்தில் தனித் தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள ஆறுமுகம் கொண்ட முருகன், கமண்டல தட்சிணாமூர்த்தி பிரசித்தி பெற்றதாகும். இக் கோயில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகளை கடந்து விட்டதால், உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் செய்ய ஹிந்து அறநிலைய துறை அழைப்பு விடுத்தது. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் முயற்சியில் உபயதாரர்கள் பலர் திருப்பணிகள் செய்து வருகின்றனர். கோயில் கோபுரத்தில் சேதமடைந்த பொம்மைகளை சரி செய்தும், பெயிண்டிங் பணிகள், சஷ்டி மண்டபம், மகா மண்டபம் தளத்தை புதுப்பித்து டைல்ஸ் ஒட்டும் பணிகள். எம்.எல்.ஏ, தொகுதி வளர்ச்சி நிதியில் கோயில் வளாகத்தில் சிமென்ட் பெஞ்சுகள் அமைத்தல் போன்ற பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இப் பணிகளை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், அனைத்து சமுதாய தலைவாகள் ஒருங்கிணைத்து வருகின்றனர். எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் கூறுகையில், 'திருப்பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கோயில் வளாகத்தில் ஏற்கெனவே அன்னதான கூடம், நூலகம், திருமண மண்டபம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் டிச . முதல் தேதி கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது,' என்றார்