கம்பம்: கம்பம் காசி விஸ்வநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளதை முன்னிட்டு இன்று (நவ.27ல்) காலை யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்குகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இக்கோயிலில் காசி விஸ்வநாதர் கோயில் 22 ஆண்டுகளுக்கு பின் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் வரும் டிச.1ல் நடக்க உள்ளது. அதற்கான யாக சாலை பூஜைகள் இன்று (நவ.27ல்) காலை துவங்குகிறது. காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, தன பூஜை, மகா கணபதி ஹோமம், கோ பூஜை, நவக்கிரக ஹோமங்கள் நடக்க உள்ளன. மாலை 6:00 மணிக்கு பிரவேச பலி, ரக்ஷோக்ன ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத சங்கிரஹணம், 6:30 மணிக்கு பூர்ண ஹூதி, தீபாராதனையுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது. நவ.28ல் மாலையில் யாகசாலை பிரவேசத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. நவ.29ல் மூன்றாம் கால யாக பூஜையும், நவ.30ல் நான்காம் கால யாக பூஜையும், அன்று மாலை ஐந்தாம் கால யாக பூஜைகளும், டிச.1 காலை 6:00 முதல் முதல் 7:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கோயில் வளாகத்தில் மூலவர் சன்னதி தெற்கு வாசல் அருகில் காசி விஸ்வநாதருக்கு 9 குண்டங்கள், விசாலாட்சி அம்மனுக்கு 9 குண்டங்கள், விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 8 குண்டங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேற்கு பக்கம் சுவாமி, அம்பாளுக்கும், கிழக்கு பக்கம் பரிவார தெய்வங்களுக்கும் இடைவெளி விட்டு யாகசாலை அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் அந்த இடைவெளியில் அமர்ந்து இரண்டு யாகசாலை பூஜைகளையும் பார்க்க, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாகசாலைகள் 100 அடி நீளமும், 50 அடி அகலத்திலும் பிரமாண்டமாய் அமைக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் - கோயில் பிச்சைக் குருக்கள் சர்வ சாதகத்தை கணித்துள்ளார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வீதியெங்கும் வண்ண விளக்குகளும், மாவிலை தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை கம்பம் தி.மு.க., எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்முடி, மாவட்ட அறங்காவலர் உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், அனைத்து சமுதாய தலைவர்கள் இணைந்து -மேற்கொண்டு வருகின்றனர்.