பாரம்பரிய முறைப்படி திருவிழா நடத்தக்கோரி கீழத்தெரு மக்கள் தர்ணா
தேவதானப்பட்டி : ''பெரியகுளம் தாலுகா மேல்மங்கலம் பட்டாளம்மன் முத்தையா கோயில் புரட்டாசி திருவிழாவை பாரம்பரியமாக நடந்து வரும் முறைப்படி நடத்த வேண்டும்.'' என, கீழத்தெரு மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இக்கோயில் பழமையானது. ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. கடந்த ஜூன் 27ல் போலீஸ் பாதுகாப்புடன் கும்பாபிஷேகம் நடந்தது. ஆண்டுதோறும் புரட்டாசியில் திருவிழா காலங்களில் கீழத்தெருவை சேர்ந்தவர்களுக்கும், அம்மாபட்டி தெருவை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கோயில் திருவிழா இன்று அக்.13 முதல் அக்.15 வரை 3 நாட்கள் நடக்க உள்ளது. கோயில் திருவிழா காலங்களில் கீழத்தெரு மக்கள் குதிரை எடுத்து வந்தனர். அம்மாபட்டி தெருவை சேர்ந்தவர்களும் குதிரை எடுப்பதற்கு மதுரை உயர் நீதிமன்றம் கிளையை அணுகினர். 'குதிரை எடுக்கலாம்' என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அம்மாபட்டி தெருவை சேர்ந்தவர்கள் குதிரை எடுப்பதற்கு தயாராகினர். தர்ணா பாரம்பரியமாக நடந்து வரும் திருவிழா முறையை மாற்றம் செய்யக்கூடாது எனவும், அம்மாபட்டி தெருவைச் சேர்ந்தவர்கள் குதிரை எடுப்பதற்கு கீழத்தெருவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை வலியுறுத்தி கீழத்தெரு குதிரை சாவடி பகுதியில், அந்த பகுதி மக்கள் 500க்கும் அதிகமானோர் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., நல்லு, ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் ஆகியோர் பேச்சு வார்த்தைக்கு அழைத்தும் உடன்பாடுவில்லை. இதனை தொடர்ந்து இரு தரப்பைச் சார்ந்தவர்களிடம் தாசில்தார் மருதுபாண்டி அமைதி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். மேல்மங்கலத்தில் அதிகளவில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.-