தி.மு.க., கவுன்சிலர் மீது நில அபகரிப்பு வழக்கு
தேனி: தேனியில் மனைவியின் பெயரில் உள்ள நிலத்தை மோசடியாக பதிவு செய்து, தனது பெயருக்கு பட்டா மாற்றி நில அபகரிப்பில் ஈடுபட்ட தி.முக., கவுன்சிலர் கடவுள், அவரது மனைவி ராஜேஸ்வரி, 2 மகன்கள், மருமகள் உட்பட ஆறு பேர் மீது தேனி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.தேனி கருவேல்நாயக்கன்பட்டி முத்துராமலிங்கம் தெரு விக்னேஷ் 31. இவரின் தாத்தா மஞ்சுக்காமத்தேவர் பெயரில் அல்லிநரகத்தில் 83.5 சென்ட் நிலம் உள்ளது. இதனை அவர் கூட்டுப்பட்டா மூலம் அனுபவித்து வந்தார். 2003ல் நிலத்திற்கு அருகில் உள்ள பெரியமுத்தையா, அழகேசன், சின்னமுத்தையா, முருகன் ஆகியோர் இடையூறு செய்தனர். இதுகுறித்து விக்னேஷ் புகாரில் பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.இந்நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சி 33வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் கடவுள், பெரிய முத்தையாவிடம் இருந்து தனது மனைவி ராஜேஸ்வரி பெயரில் 83.5 சென்ட் இடத்தை கிரையம் செய்து, அதனை தனது பெயருக்கு மாற்றி , பட்டா மாறுதல் செய்து மோசடி செய்தார். இந்நிலையில் 2024 செப் 27 ல் விக்னேஷூம், அவரது தாயார் ஜெயசுதாவும் கருவேல்நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தனர். அங்கு வந்த தி.மு.க., கவுன்சிலர் கடவுள், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் முத்துமணி, அவரது மனைவி நித்யா, மகள் அன்னமயில் ஆகிய 5 பேரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுங்களை வைத்து, நிலம் எங்களுக்கு சொந்தம், அதற்குள் நழைந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். பாதிக்கப்பட்ட விக்னேஷ், தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தி.மு.க., கவுன்சிலர் கடவுள் மற்றும் பெரிய முத்தையா உட்பட ஆறு பேர் மீது வழக்குத்தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவில் தேனி போலீசார் கவுன்சிலர் கடவுள் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.