குமுளி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்; மழை தீவிரமாவதற்கு முன் தடுப்பு நடவடிக்கை தேவை
தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில் குமுளி மலைப்பாதையும் ஒன்றாகும். இதனால் வாகன போக்குவரத்து அதிகம். சபரிமலை சீசனில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் இவ் வழியாக சென்று திரும்பும். லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். சில ஆண்டுகளுக்கு முன் மலைப் பாதை அகலப்படுத்தப்பட்டு நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதியில் கற்களால் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது. இருந்த போதிலும் சில இடங்களில் இப்பணிகள் செய்யவில்லை.பழைய போலீஸ் ஸ்டேஷன் சோதனை சாவடி, இரைச்சல் பாலம் வளைவு மாதா கோயில் வளைவு, கொண்டை ஊசி வளைவு பகுதிகளில் பாறைகள் சரிந்து விழும் அபாயமும் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. 2018ல் கனமழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக போக்குவரத்து தடை பட்டிருந்தது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்.சமீபத்தில் பருவமழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம், பேரிடர் மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தியது.மண்சரிவு ஏற்பட்ட பின் அதனை சீரமைப்பதைவிட முன்கூட்டியே இது போன்ற இடங்களை ஆய்வு செய்து தடுப்புச் சுவர் அமைத்து மிகப் பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். நவம்பர் 16ல் சபரிமலை சீசன் துவங்க உள்ள நிலையில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிக அளவில் வரும் என்பதால் அவசரப் பணியாக தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.