சுருளியாறு மின் நிலையத்தில் பராமரிப்பு நிறைவு மின் உற்பத்தி மீண்டும் துவக்கம்
கம்பம்: சுருளியாறு நீர் மின் நிலையத்தில் ஜுன் 4 ல் ஆண்டு பராமரிப்பு பணி துவங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்று நேற்று முதல் மின் உற்பத்தி துவங்கியது.தேனி மாவட்டத்தில் நீர் மின் நிலையங்கள் லோயர்கேம்ப் மற்றும் வண்ணாத்திபாறையில் அமைந்துள்ளது. லோயர்கேம்பில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் 168 மெகாவாட், சுருளியாறு மின் நிலையத்தில் ஒரு ஜெனரட்டர் மூலம் 35 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. சுருளியாறு மின் நிலையம் ஆண்டு முழுவதும் தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் கோடையில் மே மாதம் ஆண்டு பராமரிப்பு பணிகள் - மேற்கொள்வார்கள். இதற்கு காரணம் அப்போது அணைகளில் தண்ணீர் இருக்காது. பராமரிப்பு பணிகள் 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை நடைபெறும்.ஆனால் இந்தாண்டு மே மாதம் பெய்த தொடர் மழையால் மின் உற்பத்தி நடைபெற்றது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வில்லை. தற்போது மழை குறைந்திருப்பதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஜூன் 4 ல் துவங்கிய பராமரிப்பு பணிகள் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று முதல் மின் உற்பத்தி துவங்கியது. 20 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.மின் வாரியத்தினர் கூறுகையில், 'ஏற்கெனவே கடந்த மாதம் 10 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடந்தது. தற்போது 10 நாட்கள் என திட்டமிட்டு கூடுதலாக 2 நாட்கள் எடுத்து கொண்டோம். தற்போது 20 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது. லோயர்கேம்ப் மின் நிலையத்தில் முழு அளவில் மின் உற்பத்தி நடைபெறுவதால் சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி குறைத்து கொண்டோம்,' என்றனர்.