5 சிறுமிகளுக்கு திருமணம்: ஒரே நாளில் 12 பேர் மீது போக்சோ வழக்குப் பதிவு
தேனி; மாவட்ட சமூக நலத்துறையின் பரிந்துரையில் 17, 18 வயதுள்ள 5 சிறுமிகளை சிறார் திருமணம் செய்த வாலிபர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்த பெற்றோர்கள் என 12 பேர் மீது ஒரே நாளில் போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.ஆண்டிபட்டி பகுதி 17 வயது சிறுமி. இவர் பெரியகுளம் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தார். சிறுமி வீட்டின் அருகே வசிக்கும் வாலிபர் மதன் 25, காதலித்து கடந்த ஆண்டு சிறுமியை திருமணம் செய்தார். தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இதற்கு வாலிபரின் தாய் சுந்தரி உடந்தையாக இருந்துள்ளார். ஊர்நல அலுவலர் புகாரில், ஆண்டிபட்டி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் காயத்ரி வாலிபர் மதன், அவரது தாய் சுந்தரி மீது போக்சோ வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.போடியை சேர்ந்த 18 வயது சிறுமி. பழனிசெட்டிபட்டி பள்ளியில் பிளஸ் 2 படித்தார். மாணவிக்கும் 20 வயதான சஞ்சைமுனிஷ் என்பவரும் காதலித்து கடந்த ஜூலையில் இருவீட்டாருக்கு தெரியாமல் திருமணம் செய்தனர். சிறுமி தற்போது 2 மாத கர்ப்பமாக உள்ளார். போடி சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர் பூபதி புகாரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் சஞ்சைமுனிஷ் மீது போக்சோகில் விசாரிக்கின்றனர்.பொம்மையக்கவுண்டன்பட்டி 17 வயது சிறுமி. தேனி பள்ளியில் பிளஸ் 1 படித்தார். இவரை பூதிப்புரம் சன்னாசியப்பன் கோயில் தெரு வீரக்குமார் 26, காதலித்தார். 2024 டிச.12ல் இருவரும் திருமணம் முடித்தனர். விரிவாக்க அலுவலர் பூபதி புகாரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் வீரக்குமார் மீது சிறார் திருமண தடை சட்டம், போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். இதுதவிர பெரியகுளத்தில் 5 பேர், ஆண்டிபட்டியில் 3 பேர் என 12 பேர் மீது நேற்று ஒரே நாளில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.