ஆண்டிபட்டி வாரச்சந்தையில் நவீன குளியல்,கழிப்பறை தேவை
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வாரச்சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நவீன கழிப்பறை, குளியலறை ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். ஆண்டிபட்டி வாரச்சந்தை ஒவ்வொரு திங்கட்கிழமையும் கூடுகிறது. வாரச்சந்தை நாளில் காலையில் ஆட்டு சந்தையும் நடைபெறும். வாரச் சந்தைக்கு தேனி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து கடைகள் அமைகின்றனர். தொலைதூர வியாபாரிகள் முதல் நாள் இரவே சந்தை வளாகத்தில் தங்கி விடுகின்றனர். சந்தை முடிந்த நாளிலும் இரவில் தங்கி செல்கின்றனர். வாரச்சந்தை நாளில் ஆண்டிபட்டி மற்றும் சுற்று கிராமங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வாரச்சந்தை வளாகத்தில் பொதுக்கழிப்பறை, குளியலறை வசதி இல்லை. இதனால் சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வாரச்சந்தை வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிப்பறை, குளியலறை பழுதானதால் அப்புறப்படுத்தி விட்டனர். தற்போது வாரச்சந்தை வளாகத்தில் 257 கடைகள் கொண்ட புதிய வணிக வளாகம் கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. புதிய வணிக வளாகம் பயன்பாட்டிற்கு வரும் முன்னர் வாரச்சந்தை வளாகத்தில் கழிப்பறை மற்றும் குளியலறை நவீன முறையில் அமைத்து தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.