உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முல்லைப் பெரியாறு அணை பிரச்னை விவசாயிகள் இன்று குமுளியில் முற்றுகை பதட்டத்தை தவிர்க்க எல்லையில் போலீஸ் குவிப்பு

முல்லைப் பெரியாறு அணை பிரச்னை விவசாயிகள் இன்று குமுளியில் முற்றுகை பதட்டத்தை தவிர்க்க எல்லையில் போலீஸ் குவிப்பு

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையை நிபுணர் குழுக்கள் மூலம் மீண்டும் ஆய்வு செய்ய மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்ததை கண்டித்து, பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் இன்று (செப்.22) தமிழக -- கேரள எல்லையான குமுளியில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர். எல்லைப் பகுதியில் பதட்டத்தை தடுக்க போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.முல்லைப் பெரியாறு அணை பிரச்னை கடந்த சில மாதங்களாக மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ளது. கேரளாவில் பல இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர்கிறது. இதனை கண்டித்து தமிழகப் பகுதியிலும் விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை. 2.57 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நிலங்களும், ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது.அக்.1ல் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் தனது கட்டுப்பாட்டிற்குள் அணையை கொண்டு வர உள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அடுத்த 12 மாதத்திற்குள் நிபுணர் குழுவை வைத்து அணையை மீண்டும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.இதுபோன்ற ஆய்வு அணை பலவீனமாக உள்ளதாக தொடர்ந்து கூறிவரும் கேரளாவுக்கு சாதகமாகும் என்பதால் தமிழக விவசாயிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய நீர்வளக் கமிஷன் பரிந்துரையை கண்டித்து இன்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் குமுளி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர்.இதனால் தமிழக -கேரள மாநிலங்களுக்கு இடையே பெரும் பதட்டத்தை உண்டாக்கும் என்பதால் எல்லைப் பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.நேற்று இரவு முதலே கேரளப் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதித்தனர். மேலும் லோயர்கேம்பில் விவசாயிகளை தடுத்து நிறுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !