சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் மூணாறு டி.எஸ்.பி., எச்சரிக்கை
மூணாறு : மூணாறில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் தொடர்வதால் இச் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி. சந்திரகுமார் தெரிவித்தார். மூணாறில் சுற்றுலா சீசன் நாட்களில் பயணிகள் மீது தாக்குதல் அதிகரிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் கொல்லம், திருச்சி சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு கேரளா, எர்ணாகுளம் மாவட்டம், திருக்காகரா பகுதி ஆதில் முகம்மது குடும்பத்தினருடன் காரில் சுற்றுலா வந்தார். அவர்கள் தங்க அறை தேடியபோது சுற்றுலா வழிகாட்டி ஒருவர் அறை உள்ளதாக கூறி காலனி பகுதிக்கு அழைத்துச் சென்றார். பல காரணங்களால் பயணிகள் அறையை நிராகரித்து திரும்பினர். வரும் வழியில் வாகனம் நிறுத்தியது தொடர்பாக சுற்றுலா பயணிகளிடம் சிலர் வாக்குவாதம் செய்தனர். அதன் பிறகு பழைய மூணாறு சி.எஸ்.ஐ. சர்ச் அருகே ரோட்டோர கடையில் உணவு அருந்தி கொண்டிருந்த பயணிகளை இரண்டு காரில் வந்தவர்கள் தாக்கினர். அதில் பலத்த காயம் அடைந்த ஆதில் முகம்மது, ஷிஜிமோள், சுபீன் ஆகியோர் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அறையை நிராகரித்ததால் ஆத்திரம் அடைந்த சுற்றுலா வழிகாட்டியின் தூண்டுதலின் பெயரில் பயணிகள் தாக்கப்பட்டதாக தெரியவந்தது. இச்சம்பவத்தில் நல்லதண்ணி எஸ்டேட் செல்லும் ரோட்டில் வசிக்கும் சுற்றுலா வழிகாட்டி தீபக்ராஜன் மீது மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மூணாறு டி.எஸ்.பி.சந்திரகுமார் கூறியதாவது: மூணாறில் பயணிகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை கையில் எடுக்க யாரையும் அனுமதிக்க இயலாது. மூணாறிலும், சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளிலும் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகள் போலீசார் சார்பில் 24 மணி நேரமும் செய்யப்படும். மூணாறு போலீஸ் ஸ்டேஷன் அலைபேசி எண் 9497961831, டோல் பிரீ எண் 112 ஆகியவற்றில்தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்றார்.