உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முறுக்கோடை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் இன்றி சிரமம் தரம் உயர்த்தியும் புதிய வகுப்பறைகள் இல்லை

முறுக்கோடை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் இன்றி சிரமம் தரம் உயர்த்தியும் புதிய வகுப்பறைகள் இல்லை

கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே முறுக்கோடை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள், ஆசிரியர்கள் தவிக்கின்றனர். கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது முறுக்கோடை மலைக்கிராமம். 2012ல் அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் தண்டியன்குளம், சீலமுத்தையாபுரம், வீரசின்னம்மாள்புரம், உருட்டிமேடு, எருமைச் சுனை, நந்தனாபுரம், வாழவந்தான்புரம், காமராஜபுரம், ராயர் கோட்டம், வைகை நகர் உட்பட பல மலைக்கிராமங்களை சேர்ந்த 255 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி தரம் உயர்வுக்கு பின் பள்ளிக்கு தேவையான வகுப்பறை கட்டடங்கள் கட்டவில்லை. ஏற்கனவே உள்ள வகுப்பறைகளில் நெருக்கடியான இடங்களில் மாணவர்கள் படிக்கின்றனர். அனைத்து மாணவர்களுக்கும் தேவையான இருக்கை வசதியும் இல்லை. வகுப்பறை பற்றாக்குறையால் பல நேரங்களில் மரத்தடியில் வகுப்புகளை நடத்துகின்றனர். பள்ளி அருகே உள்ள ஊராட்சிக்கு சொந்தமான சேவை மைய கட்டிடத்திலும் இரு வகுப்புகள் செயல்படுகிறது. பள்ளியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மாணவ மாணவிகள் கூறியதாவது: பள்ளி துவங்கும், முடியும் நேரத்தில் பஸ் வசதி இல்லை. இதனால் மாணவ மாணவிகள் பலர் 3 கி.மீ., தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. பள்ளியில் புதிதாக ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் தேவைப்படுகிறது. ஆசிரியர்களுக்கும் ஓய்வு அறை இல்லை. தொழிற்கல்வி, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் இதுவரை இல்லை. பல ஆண்டுகளுக்குப் பின் தற்போது மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான ஆய்வக கட்டிடம் கட்டுமான பணி நடந்து வருகிறது. மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை